4. நீர்ப்படைக் காதை




175

பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு
ஆடகப் பெருநிறை யையைந் திரட்டித்

தோடார் போந்தை வேலோன் றன்னிறை
மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு


173
உரை
176

        பெருமகன் மறையோற் பேணி - அரசன் மாடலனை விரும்பி, ஆங்கு அவற்கு ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டி - அவனுக்கு ஐம்பது துலாம் என்னும் பெருநிறையுடைய பொன்னாகிய, தோடுஆர் போந்தை வேலோன் தன்நிறை-தனது எடை யுள்ளதனைத் தோடுகள் பொருந்திய பனம்பூமாலை யணிந்த வேலினையுடைய செங்குட்டுவன், மாடல மறையோன் கொள்கென்று அளித்து - மாடலனாகிய அந்தணன் இதனைக் கொள்வானாகவெனக் கொடுத்து ;

        பெருமகனாகிய வேலோன் மறையோற் பேணி அவற்குத் தன் நிறையாகிய ஐம்பது துலாம் என்னும் பெருநிறையுடைய பொன்னை அளித்து எனக் கொண்டு கூட்டுக. தன்னிறையுள்ள பொன்னைத் தானஞ் செய்வது 'துலா புருடதானம்' எனப்படும். செங்குட்டுவன் ஐம்பது துலாம் நிறையுள்ளவன் எனப்படுதலால் நாற்பது தோலாவாகும் இராத்தல் முந்நூற்றெழுபத்தைந்து அவனது நிறையாகும் என்பது பெற்றாம். துலாம் - நூறு பலம் கொண்ட நிறை. மறையோன் - விளியுமாம்.