4. நீர்ப்படைக் காதை



180





185





190

தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த

மாபெருந் தானை மன்ன குமரர்
சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண்
விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள்

வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப்
பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு
எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர்

அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை
இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்


179
உரை
191

        தாபத வேடத்து உயிர்உய்ந்து பிழைத்த - தவ வேடம் பூண்டு உயிர்தப்பிப் பிழைத்த, மாபெருந் தானை மன்ன குமரர் - மிகப்பெரிய படைகளையுடைய அரச குமாரர்களையும், சுருள் இடு தாடி மருள்படு பூங்குழல் - சுரிந்த மோவாயும் கருமை பொருந்திய அழகிய கூந்தலும், அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண் - செவ்வரி பரந்து கிடக்கின்ற கொழுவிய கயல்மீன் போன்ற பெரிய கண்களும், விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய் - விரிந்த வெள்ளிய தோடுகளுடன் வெண்பற்களும் பவளம்போன்ற வாயும், சூடக வரி வளை - சூடகமாகிய அழகிய வளைகளும், ஆடு அமைப் பணைத் தோள் - அசைகின்ற மூங்கி லனைய பருத்ததோள்களும் வளர் இள வனமுலை - வளர்கின்ற அழகிய இளங்கொங்கைகளும், தளிர்இயல் - தளிர்போலும் சாயலும், மின்இடை - மின்னையொத்த இடையும், பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு - பரி புரமணிந்த சிறிய அடிகளுமுடைய ஆரியப் பேடியுடன், எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் - மறத்திறன் ஒழியாத அரசர் தம் மேம்பட்ட மொழியினைப் பொறாமல் மறுத்துரைக்கும், கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவர் - சட்டையிட்ட பிரதானிகள் ஆயிரவரை, அரியிற் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கனகவிசயரை - அழிதலில்லாத போந்தைக் கண்ணி சூடிய அருந்தமிழ் வேந்தன் ஆற்றலை அறியாமற் போர் புரிந்து தோற்ற கனக விசயரையும், இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி - சோழபாண்டியர்கட்கு அழைத்துச் சென்று காட்டுமாறு எவி ;

        அரசரை அரசகுமரர் என்றலும் மரபு. மன்ன
குமரர் என்புழி இரண்டனுருபும் எண்ணும்மையும், கனகவிசயரை என்புழி எண்ணும்மையும் விகாரத்தாற் றொக்கன. மன்ன குமரரையும் கனகவிசயரையும் ஆரியப் பேடியோடு வேந்தர்க்குக் காட்டிட ஈரைஞ்ஞூற்று வரை ஏவி யென்க. இனி, மன்ன குமரராகிய கனக விசயரை ஆரியப் பேடியோடு காட்டிட என்றுமாம். கஞ்சுகமாக்கள்-தூதருமாம். மருள் - கருமை. வெண்டோடு - சங்கினாற் செய்த தோடு. சூடகம் - கைவளையின் வகை. எஞ்சா மன்னர் - வேற்று மன்னர். இறை மொழி - பெருமித மொழி. மறுக்கும் என்றது தம்மரசர்க்குத் தாழ்வு வராதபடி வேற்றரசரது பெருமித மொழியை மறுத்துரைக்கும் அஞ்சாமையுடைய என்றபடி. அரி - கெடுதல். அரியிற் போந்தை, வலித்தல் விகாரம். தமிழ் - தமிழ் வேந்தனாகிய சேரன் ; சேரன் படைஞருமாம். தமிழின் வெற்றிகண்டு உவப்ப ரென்னுங் கருத்தால் சோழ பாண்டியர்க்குக் காட்டிட ஏவினானென்க. பேடியினியல்பு 1"சுரியற்றாடி மருள்படு பூங்குழற், பவளச் செவ்வாய்த் தவள வாணகை, யொள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக், கருங்கொடிப் புருவத்து மருங்கு வளை பிறைநுதற், காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை, யகன்றவல்கு லந்நுண் மருங்கு, லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து, . . . பேடிக் கோலத்துப் பேடு" என்பதனானும் அறியப்படும்.


1 மணி. 3 : 116-25.