|
195
|
திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும்
பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயிலிளந் தாமரைப் பல்வண் டியாழ்செய
வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக்
குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக்
குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்
வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத்
தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு
|
|
திருந்து துயில்கொள்ளா அளவை - நல்ல உறக்கங் கொள்வதன்முன், யாங்கணும் - எவ்விடத்தும்,
பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய - பரந்த
நீரினையுடைய கங்கையைச் சூழ்ந்த பழனங்களில் உள்ள பசிய இலைகளுடன் நெருங்கிய புதிய
தாமரை மலர்களில் வண்டினங்கள் யாழின் ஒலியைச் செய்ய, வெயில் இளஞ்செல்வன் விரிகதிர்
பரப்பி - ஒளிதரும் இளஞாயிறு விரிந்த கிரணங்களைப் பரப்பிக்கொண்டு, குணதிசைக் குன்றத்து
உயர்மிசைத் தோன்ற - கீழ்த்திசை மலையின் உச்சிமீது தோன்ற, குடதிசை ஆளும் கொற்றவேந்தன்
- மேற்றிசையினையாளும் வெற்றி வேந்தனாகிய செங்குட்டுவன், வடதிசைத் தும்பை வாகையொடு
முடித்து-வடதிசையிற் போரினை வென்று தும்பையை வாகை மாலையுடன்சூடி, தென்றிசைப் பெயர்ந்த
வென்றித் தானையொடு - தென்றிசை நோக்கிப் புறப்பட்ட வெற்றி மிக்க சேனைகளுடன் ;
துயில்கொள்ளா வளவை வெயிலிளஞ் செல்வன்
தோன்ற வென்க. இது செங்குட்டுவனது ஆள்வினையின் கடுமை கூறியபடி. தும்பை வாகையொடு முடித்து
- தும்பைத் துறையையும் வாகைத் துறையையும் முடிவு செய்து என்றுமாம். வேந்தனாகிய செங்குட்டுவன்
தானையொடு (256) வஞ்சியுட் புகுந்தனன் என முடியும். இனி, செங்குட்டுவன் பிரிவால் அவனுடைய
தேவி பள்ளியில் துயிலின்றியிருக்கு முறைமை கூறப்படுகின்றது.. |
|