4. நீர்ப்படைக் காதை

200






205

நிதிதுஞ்சு வியன்நகர் நீடுநிலை நிவந்து

கதிர்செல வொழித்த கனக மாளிகை
முத்துநிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை
இலங்கொளி மணிநிரை யிடையிடை வகுத்த

விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய
மடையமை செறுவின் வான்பொற் கட்டில்
புடைதிரள் தமனியப் பொற்கா லமளிமிசை
இணைபுண ரெகினத் திளமயிர் செறித்த
துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு


200
உரை
209

        நிதி துஞ்சு வியன் நகர் - பொருட்குவை யனைத்தும் தங்குதல்கொண்ட அகன்ற கோயிலின்கண், நீடுநிலை நிவந்து கதிர்செலவு ஒழித்த கனகமாளிகை - நெடிய நிலைகளுடன் உயர்ந்து ஞாயிற்றின் செலவினை நீக்கிய பொன் மாளிகையில், முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய - முத்துக்களை வரிசையாகக் கோத்த சல்லியும் தூக்குமாகியவற்றால் முழுவதும் வளைக்கப்பட்ட, சித்திர விதானத்து-ஓவியங்கள் அமைந்த மேற்கட்டியினையுடைய, இலங்கு ஒளிமணி நிரை இடையிடை வகுத்த விலங்கு ஒளி வயிரமொடு பொலந்தகடு போகிய - பக்கத்தே யோடும் ஒளியுடைய வயிரத்துடன் விளங்கும் ஒளிபொருந்திய மாணிக்கத்தை இடையிடையே வரிசையாகப் பதித்த பொற்றகடு ஒழுகிய, மடை அமை செறிவின் வான்பொற் கட்டில் - மூட்டுவாய் செறியப் பொருந்தின சிறந்த பொற்கட்டிலாகிய, புடைதிரள் தமனியப் பொற்கால் அமளிமிசை - பக்கந் திரண்ட பொற் கால்களையுடைய மஞ்சத்தின்மீது, இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணைஅணைப் பள்ளி - சேவலுடன் புணர்ந்த அன்னப்பேடை புணர்ச்சியால் உருகியுதிர்த்த மென்மையுடைய தூவியைச் செறித்த பலவாக அடுக்கிய அணைகளையுடைய படுக்கையின்கண், துயில் ஆற்றுப்படுத்து - துயிலினைப்

        போக்கி ; துஞ்சுதல் - தங்குதல். நகர் - கோயில். மாளிகை - அந்தப்புரம். விதானத்தையுடைய கட்டில், பொலந்தகடு போகிய கட்டில், பொற் காலையுடைய கட்டில் எனத் தனித்தனி கூட்டிக் கட்டிலாகிய அமளியென்க. கட்டில் அமளி, தமனியம் பொன் என்பன ஒருபொருட் சொற்கள். துணைபுணர் எனவும், இணையணை எனவும் கொண்டு கூட்டுதலுமாம்; 1"துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த, இணையணை மேம்பட" என்பதும் அதனுரையுங் காண்க. ஆற்றுப்படுத்து - செலுத்தி ; தன்னிடத்தில்லாது போக்கியென்றபடி. ஆற்றுப்படுத்து (251) ஓர்த்துடனிருந்த என்றியையும்.


1. சிலப். 4 : 66-7.