4. நீர்ப்படைக் காதை





220

அமைவிளை தேறல் மாந்திய கானவன்
கவண்விடு புடையூஉக் காவல் கைவிட
வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த

ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த
வாகை தும்பை வடதிசைச் சூடிய
வேக யானையின் வழியோ நீங்கெனத்
திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்


217
உரை
224

        அமை விளை தேறல் மாந்திய கானவன் - மூங்கிலின் கண் விளைந்த கள்ளையுண்ட வேட்டுவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட - கவண்கற்களை விடுத்துப் புடைக்கின்ற காவலினைக் கைவிடுதலால், வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த - பெரிய தினைப்புனத்தில் உண்ணுதலை விரும்பிவந்த, ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த - உயர்ந்த இயல்புடைய யானை அயர்ந்து உறக்கமடைய, வாகை தும்பை வடதிசைச் சூடிய - வாகையையும் தும்பையையும் வடநாட்டின் கண் முடித்த, வேக யானையின் வழியோ நீங்கென - விரைந்த செலவினையுடைய யானை வரும்வழியிற் செல்வாய் இவ்விடம்விட்டு நீங்குவாய் என்று, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-அரசனுடைய வெற்றித் திறங்களைத் திறப்பண்ணினாற் கூறிச் சேணிலே உயர்ந்த பரணின்மீ திருந்து குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாடலையும் ;

        அமை - மூங்கில் ; அதன் குழாய்க்கு ஆகுபெயர். விளைதல்-முற்றுதல் ; கள்ளினை மூங்கிற் குழாயில் வார்த்துப் புதைத்து முற்ற வைப்பரென்க. விடு என்பதனை விடுத்து என எச்சமாகவும், புடையூ என்பதனைப் புடைத்தல் எனத் தொழிற் பெயராகவும் கொள்க. கள்ளுண்ட மயக்கத்தால் காவலைக் கைவிட்டமையின் உண்ணவந்த யானை துயிலும்படி பாடிய பாணியென்க. அரசன் சூடிய வாகையும் தும்பையும் அவன் ஏறிய யானையும் சூடிய தென்றார். தினைப் புன முண்ணவந்த யானையை நோக்கி 'நீ இவ்விடம்விட்டு அவ் வியானையின் வழியிற் செல்வாய்' என்றார். வழியோய் எனப் பாடங்கொண்டு, யானையின் வழியினையாகலின் நீங்கென் றுரைத்தலுமாம். திறத்திறம் - முறைமுறையாக வென்றுமாம்.