4. நீர்ப்படைக் காதை







235





240

தண்ணான் பொருநை யாடுந ரிட்ட

வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து
விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை
வண்டுண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை

முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்
முருகுவிரி தாமரை முழுமலர் தோயக்
குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து
வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப்
பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக்

காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇக்
கோவலர் ஊதுங் குழலின் பாணியும்


231
உரை
241

        தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன் பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து - தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை - இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை - வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த நீலமணி போலும் நிறம்பொருந்திய இதழ்களையுடைய குவளை மலர்களை, முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் - முள்ளிப்பூ மாலையுடன் முடித்த குடுமியின்கண், முருகுவிரி தாமரை முழுமலர் தோய - மணம்விரியும் தாமரையின் முழுமலரும் பொருந்துமாறு அணிந்து, குருகுஅலர் தாழைக் கோட்டுமிசை இருந்து - குருகுபோலும் பூ அலர்ந்த தாழையின் கிளைமீது இருந்துகொண்டு, வில்லவன் வந்தான் - விற்கொடியையுடைய சேரலன் வந்தான், வியன்பேர் இமயத்துப் பல்ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என - அகன்ற பெரிய இமயமலையினின்றும் அவன் கொணர்ந்த பல ஆனிரைகளுடன் நீவிரும், சேர்வீர் என்று, காவலன் ஆன்நிரை நீர்த்துறை படீஇ- அரசனுடைய ஆனினங்களை நீர்த்துறையிலே படிவித்து, கோவலர் ஊதும் குழலின் பாணியும் - ஆயர்கள் ஊதும் வேய்ங் குழலின் பாடலும் ;

        முண்டகம் - கடன்முள்ளிச் செடி. குருகு-வெண்ணிறப்பறவை. தாழையின் பூவைக் குருகென உவமையாற் கூறினார் ; 1"தோடார் தோன்றி குருதி பூப்ப" என்புழிப்போல. தோய அணிந்து என ஒரு சொல் வருவிக்க. மருதத்திற்கும் நெய்தற்குமுரிய பூக்கள் கூறப்படுதலின் இஃது அவ்விரண்டுஞ் சார்ந்த முல்லையாமென்க. கோவலர் ஆனிரையை நீர்த்துறையிற் படிவித்துத் தாழைக் கோட்டு மிசையிருந்து ஊதும் குழலின் பாணி யென்றியையும்.


1. முல்லை. 96.