4. நீர்ப்படைக் காதை





245





250

வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்
குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை
வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்

கழங்காடு மகளி ரோதை யாயத்து
வழங்குதொடி முன்கை மலர ஏந்தி
வானவன் வந்தான் வளரிள வனமுலை
தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும்

அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும


241
உரை
250

        வெண்டிரை பொருத வேலை வாலுகத்துக் குண்டு நீர் அடைகரைக் குவையிரும் புன்னை - ஆழமாகிய நீரையுடைய கடலின் வெள்ளிய அலைபொருத வெண்மணலையுடைய அடை கரைக்கண் திரண்ட பெரிய புன்னையினிடத்தே, வலம்புரிஈன்ற நலம்புரி முத்தம் - வலம்புரிச் சங்கமீன்ற அழகிய முத்துக்களை, கழங்காடு மகளிர் ஓதைஆயத்து - ஆரவாரம் பொருந்திய கூட்டத்துடன் கழங்காடுகின்ற மகளிர், வழங்குதொடி முன்கை மலர ஏந்தி - கழலும் வளையணிந்த முன்னங்கைகள் மலருமாறு ஏந்தி, வானவன் வந்தான் - சேரர் பெருமான் வந்தான், வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய - நம்முடைய வளர்கின்ற அழகிய இளங் கொங்கைகள் அவனுடைய தோளின் நலத்தை நுகர்தற் பொருட்டு, தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் - மடப்பத்தை யுடையீர் அவன் முடித்த தும்பை வஞ்சிகளைப் பனை மாலையுடன் யாம் பாடக்கடவேம் என்னும், அஞ்சொற் கிளவியர் அம் தீம் பாணியும் - அழகிய சொற்களையுடைய மகளிரின் அழகிய இனிய பாடலும் ;

        வழங்கு தொடி-ஏறுதலும் இழிதலுமுடைய தொடி ; ஈகையையுடைய கையென்றுமாம். பாடுதலால் தம்மிடத்து வருவானென்று கருதி, உணீஇய பாடுதும் என்றார். சொற்கிளவி, ஒரு பொருளிரு சொல். 'ஏந்தி' யென்னும் வினையெச்சம் 'எனும்' என்னும் பெயரெச்ச வினையோடு முடிந்தது. புன்னையிடத்தே கழங்காடு மகளிராகிய அஞ்சொற் கிளவியர் முத்துக்களை முன்கையில் ஏந்திக் கொண்டு தோணலம் உணீஇய பாடுதும் என்று பாடாநிற்கும் இனிய பாடலும் என்க.