மண்
தேய்த்த புகழினான் - பூமி சிறுகும்படி வளர்ந்த புகழையுடையான்; மதிமுக மடவார்தம் பண்
தேய்த்த மொழியினார் ஆயத்து - பண்ணை வென்ற மொழியாராகிய மதிபோலும் முகத்தையுடைய
மடவார் தமது ஆயத்தின்கண், பாராட்டிக் கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கி
- உலகிலே கண்டு ஏத்தப்படும் செவ்வேள் என்று பாராட்டி அவன் இசையைப் பரப்பி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் - காமக்குறிப்பின் உட்கொண்டு ஏத்துதற் குரியான்; கோவலன்
என்பான் மன்னோ - அவன் கோவலனென்று பெயர் கூறப்படுவான்.
மொழியினாராகிய மடவார் தம் ஆயத்துச்
செவ்வேள் என்று பாராட்டி எனக் கொண்டு கூட்டுக. கண்டேத்தும் என்றது வேற்றுமை. செவ்வேளைக்
கூறினமையின் கோவலனும் நிறஞ் செய்யனாதல் வேண்டும். போக்கி என்னும் எச்சத்தைத்
திரித்து, மடவார் இசை பரப்ப அது கண்ட ஏனோரும் காதன்மையாற் கொண்டு ஏத்தப் படும்
கிழமையான் எனலுமாம். கிழமையான் - கொடை, வீரம், அழகு என்றிவற்றிற்குரியான்.
மொழியினால் என்பது பாடமாயின் மடவார் மொழியினாற் பாராட்டி யென்க. பத்தினியை
ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற் கூறினார் என்க.
[அடி. இனி மடவார் என்பதற்குப் பூமாதும்,
கலைமாதும், சயமாதும், புகழ்மாதும், புவிமாதும் என்று கூறி, இவர், அழகிற்கும் அறிவுக்கும்
ஆண்மைக்கும் புகழுக்கும் பொறைக்கும் இவனென் றுட்கொண்டு ஏத்துங் கிழமையான் எனினும்
அமையும்.]
|