1. மங்கலவாழ்த்துப் பாடல்

50
.வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை


50
உரை
53

       வான் ஊர் மதியம் சகடு அணைய - வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே, வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை - வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போலும் கற்புடையாளை, கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட - பிதாமகன் மறைநெறியிற் சடங்கு காட் டக் கோவலன் கலியாணஞ் செய்ய, தீவலம் செய்வது - அவ்விருவரும் தீயை வலஞ் செய்யு மிதனை, காண்பார் கண் நோன்பு என்னை - காண்கின்றவர் கண்கள் முன்பு செய்த தவம் யாது காண் என்பாராய்,

       சகடு - உரோகிணி; பண்டைத் தமிழ்மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்தநாளாகக் கொண்டிருந்தனர்; உரோகிணியைக்கூடின நாளில் சந்திரன் உச்சனாகலின் எவ்வகைத் தீங்கும் நீங்கு மென்னும் கருத்தினர் போலும்;

       1 "அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய"

       என்பதுங் காண்க. கலியாணஞ் செய்ய எனவும், அவர் எனவும் சொற்கள் விரித்துரைக்க. மாமுது பார்ப்பான் - பிரமன்; ஈண்டு இருவரையும் இடைநின்று பொருத்துவிக்கும் பார்ப்பானாவன்;

       2 "பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப"

       என்னுஞ் சூத்திரவுரையில், 'எண் வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திர முதலியனவும் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்த மாதலின் அவை அவன் கண்ண வெனப்படும். 'இவனைப் பிரசாபதி யென்ப,' என நச்சினார்க் கினியர் கூறினமை காண்க. பிரசாபதி பிரமன். காண்பார்கள் நோன்பு எனப் பிரித்துரைத்தலுமாம். இதனைப் பிரசாபத்தியம் என்பர் அடியார்க்குநல்லார்; அது தமிழில் ஒப்பு என்று கூறப்படும்; ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது என்பர்.


1 அகம். 136.   2 தொல். பொருள். 104.