அங்கண்
உலகில் அருந்ததி அன்னாளை - அழகிய இடத்தையுடைய புவியின் அருந்ததி போல்வாளை. மங்கல
நல் அமளி ஏற்றினார் தங்கிய - பொருந்திய நல்ல மங்கல அமளி யிடத்தே ஏற்றினார்;
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை - இவ்விடத்து நின்றும் இமயத்தில் இருத்திய
புலி யானது, உப்பாலைப் பொற்கோட்டு உழையதா - அதனது உப்பாலிடத்தாயே நிற்பதாக;
எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே - எப்பக்கத்
தும் தன் போர் மேம்பட்ட சினம்பொருந்திய வேலையுடைய வளவன் மாறில்லாத தன் திகிரியை
உருட்டுவோனாக எனச் சொல்லி யென்க.
உலகினருந்ததி, இல்பொருளுவமம். அமளி - பள்ளி; படுக்கை. வேங்கை - புலிக்கொடி.
வாள் - கொடுமை; புலிக்கு அடை. பொற்கோடு - பொன்மலை; இமயம்; ஈண்டுச் சுட்டுமாத்திரை.
சினவேல், இலக்கணை வழக்கு. உருட்டுவோனாக என விவரிக்க. கொடியன்னார் ஏத்தித் தூவி,
வேங்கை உழையதாகச் செம்பியன் உருட்டுவோனாக எனச் சொல்லி, அருந்ததியன்னாளை அமளியேற்றினார்
என்க.
இச் செய்யுள் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
மங்கல வாழ்த்துப் பாடல் முற்றிற்று
|