1. மங்கலவாழ்த்துப் பாடல்


போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ:


26
உரை
29

       போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும் - தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு இவள் வடிவை யொக்குமென்றும், தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும் - குற்றமில்லாத அருந்ததியின் கற்பு இவள் கற்பை யொக்கு மென்றும், மாதரார் தொழுது ஏத்த - உலகின் மாதரார் தன்னைத் தொழுது ஏத்தும்படி, வயங்கிய பெருங் குணத்துக் காதலாள் - விளங்கிய பெருங்குணங்களைக் காதலிப்பாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ - அவள் கண்ணகி யென்று பெயர் கூறப்படுவாள்.

       திருவினாள், ஒரு சொல். இவள் வடிவு என்று வருவித்துரைக்க. தீது - பிறர்நெஞ்சு புகுதல்;

       1"மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயிற் பிறர்நெஞ்சு புகாஅர்"

என்பது காண்க.

       திறம் - கற்பு. பெருங் குணத்தாற் காதலிக்கப்படுபவள் என்றுமாம். மன்னும், மன், ஓ என்பன அசைநிலை இடைச்சொற் கள்.


1 மணி. 22: 45 -- 6