ஆங்கு
- அப் புகாரினிடத்து, பெருநிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த - நெடுநிலம் முழுவதையும்
தனியே ஆளும் சோழ மன்னனை முதற் குடியாக வைத்து எண்ணுதலை யுடைய, ஒரு தனிக் குடிகளோடு
- ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளையோடு கூடி, உயர்ந்து ஓங்கு செல்வத்தான் - மிக்கோங்கிய
செல்வத்தை யுடையான், வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் - அறநெறியால்
வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்;
இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் - அவ்விருநிதிக் கிழவனுடைய மகன்
பதினாறாண்டுக்கு உட்பட்ட பிராயத்தானாயினன்.
பெருமகன் - கரிகால னென்பர் அடியார்க்குநல்லார்;
அங்ஙனந் துணிதல் சாலாதென்பது பின்னர் விளக்கப்படும். ஒப்பின்மையின் மிகுதி கூறுவார்
ஒரு தனிக் குடிகள் என்றார். உயர்ந்தோங்கு, ஒருபொரு ளிருசொல். வருநிதி - கலத்தினுங்
காலினும் வருநிதி யென்றுமாம். பலர்க்கு என்னும் பாடத்திற்கு இல்லார் பலர்க்கும்
என்றுரைக்க. ஆர்த்தும் - நிறைவிக்கும் என்றுமாம். மாசாத்துவான் - இயற்பெயர். இருநிதிக்
கிழவன் - சிறப்புப்பெயர். மாசாத்துவான் குடிப்பெயர் என்பர் அரும்பதவுரை யாசிரியர்.
இருநிதி - பெரிய நிதி; சங்கநிதி, பதுமநிதி யிரண்டும் என்றுமாம். தலைவன் பதினையாண்டும்
பத்துத் திங்களும் புக்கவனும் தலைவி பதினோராண்டும் பத்துத்திங்களும் புக்கவளும் ஆகல்
வேண்டும் என்பராகலின், அகவையான், அகவையாள் என்றார். இதனை,
1
"களவினுள் தவிர்ச்சி வரைவின் ஈட்டம் திங்க ளிரண்டின் அகமென மொழிப"
என்னும் களவியற் சூத்திர உரையானறிக.
|