5. நடுகற் காதை


தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை
மண்ணக நிழற்செய மறவா ளேந்திய
நிலந்தரு திருவின் நெடியோன் றனாது
வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர்


1
உரை
4

       தண்மதியன்ன தமனிய நெடுங்குடை - குளிர்ந்த திங்கள் போலும் பொற்றொழிலமைந்த நெடியகுடை, மண்ணகம் நிழற் செய மறவாள் ஏந்திய - இவ்வுலகிற்கு நிழலைச் செய்ய வீர வாளினை ஏந்திய, நிலந்தரு திருவின் நெடியோன் தனாது - நிலத்திற்குப் பல செல்வத்தினையுங் தருகின்ற செங்குட்டுவனது, வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர் - வெற்றி யுண்டாகுஞ் சிறப்பினையுடைய வஞ்சியாகிய மூதூர்க்கண்ணே ;

       காம்பும் முகப்பும் பொன்னாதலான் 'தமனிய நெடுங்குடை' என்றார்; 1"பொன்னணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும் ..... குடை" என்றார் பிறரும். 2"நின் விண்பொரு வியன்குடை, வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய, குடிமறைப் பதுவே" என்றாராகலான், நெடுங்குடை மண்ணக நிழற்செய என்றார். நிலந்தரு திரு - விளைவுமாம் ; இனி, பகைவர் நிலத்தினைத் தன தாக்கும் வெற்றித்திரு எனலுமமையும். நெடியோன் - யாவரினும் உயர்ந்தோன். பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரலிரும்பொறை யென்னும் சேரமன்னனை 3"நிலந்தரு திருவின் நெடியோய்" எனக் கூறுதலுங் காண்க.


1. சீவக. 1170. 2. புறம், 35. 3. பதிற், 82.