5. நடுகற் காதை




50

படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்
திடைநின் றோங்கிய நெடுநிலை மேருவிற்
கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய
தமனிய மாளிகைப் புனைமணி யரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணங் காணிய வருவழி


47
உரை
52

       படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து-ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த பயன் பொருந்திய இப் பெரிய வுலகத்து, இடை நின்று ஓங்கிய நெடுநிலை மேருவின் - நடுவிலே நின்று உயர்ந்த நீண்ட சிமயங்களையுடைய மேருவரைபோல, கொடிமதில் மூதூர் நடுநின்று ஓங்கிய - கொடிகட்டிய மதிலினையுடைய பழம் பதியாகிய வஞ்சியின் இடையே நின்றுயர்ந்த தமனிய மாளிகைப் புனை மணி யரங்கின் - பொன் மாளிகையின் கண் மணிகளால் அழகுசெய்த நிலா முற்றத்திருந்து, வதுவை வேண்மாள் மங்கலமடந்தை - பட்டத்துத் தேவியாகிய வதுவைவேண்மாள், மதியேர் வண்ணங் காணிய வருவழி - திங்களின் அழகினைக் காணவந்த காலை ;

       படுதிரை, ஆகுபெயர். உலகமும் அதன் நடுவுள்ள மேருவும் வஞ்சிக்கும் அதன் நடுவுள்ள தமனிய மாளிகைக்கும் உவமை. வதுவை - கல்யாணம். வேண்மாள் - வேள்குல மகள்; பெயர் ஏர்- எழுச்சியுமாம்.