5. நடுகற் காதை

90




95

நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு
வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக்
கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்
சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை


90
உரை
95

       நீள்அமர் அழுவத்து நெடும்பேர் ஆண்மையொடு - பெரிய போர்க்களப் பரப்பிலே மிக்க பெரிய வீரத்தோடே, வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து - தாம் கொணர்ந்த வாளினையுங் குடையினையும் போர்களத்தே போகட்டு, கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை - (பகைவர்) கொல்லுதற்கு ஒருப்படாத தவ வடிவோடே உயிர் பிழைத்த பகை மன்னரை, வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று என - வெல்லும் போரினிடத்துப் பிடித்துக் கோடல் வெற்றிச் செயலன்று என்று, தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன் சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை - இந்திரவிற்போலும் மாலையை அணிந்த மார்பினையுடைய சோழர் பெருமான் முதன்மைபெற்ற தேர்ப்படையினையுடைய மன்னனுக்குக் கூறினான்;

       நெடும் பேராண்மையொடு என்பது இகழ்ச்சிக்குறிப்பு. முனிவரைக் கோறல் முறையன்று என்பதுணர்ந்து, இவர் தவவேடங் கோடலால், கொல்லாக் கோலத் துயிருய்ந்தோர் எனக் கூறினார். முன்னர், 1"தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த, மாபெருந் தானை மன்னகுமரர்" என வந்தமை காண்க, வெற்றம் - வெற்றி. தலைவற்கு - நினக்கு; முன்னிலையிற் படர்க்கை. உரைத்தல் - உரைப்பித்தல். செம்பியர் பெருந்தகை உயிருய்ந்தோரைக் கோடல் வெற்ற மன்றென உரைத்தனன் என முடிவு செய்க.


1. சிலப். 27 ; 179-80.