5. நடுகற் காதை



100




105


ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோ லாங்குக்
கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி
இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்
துமையொரு பாகத் தொருவனை வணங்கி
அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல்
கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம்
புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்


98
உரை
107

       ஆரிய மன்னர் - ஆரிய வரசர்கள், அமர்க்களத்து எடுத்த - போர்க்களத்தே பற்றிய, சீர்இயல் வெண்குடைக் காம்பு- சிறப்புடைய வெண்கொற்றக் குடையின் காம்பாகிய, நனிசிறந்த சயந்தன் வடிவின் தலைக்கோல் - மிகவுயர்ந்த சயந்தன் வடிவாம் தலைக்கோலாக, ஆங்குக் கயந் தலை யானையிற் கவிகையிற் காட்டி - அங்கே பெரிய தலையையுடைய யானையின் மீதுள்ள குடையினின்றும் காட்டியும், இமையச் சிமையத்து இருங் குயிலாலுவத்து - இமயமலையின் முடியின் பக்கத்ததாய பெரிய குயிலாலுவம் என்றவிடத்தமர்ந்த, உமையொரு பாகத்து ஒருவனை வணங்கி - உமையினைத் தன் இடப் பக்கத்துடைய ஒப்பற்ற இறைவனை வணங்கியும், அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து - போர்க்களம் நும் மன்னனுடையதாக அதனை விடுத்து, தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல்- பெருமையினையுடைய தவ வடிவங் கொண்ட அரசர்மீது, கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம் - வெவ்விய தீப்போலும் சினத்தினைக் கொண்டோனுடைய வெற்றி, புதுவது என்றனன் போர்வேற் செழியன் - போரிற் சிறந்த வேற்படையினையுடைய பாண்டியன் புதுவதாகும் என்று கூறினன்;

       தலைக்கோல் பகைவரிடத்துப் பற்றிய குடைக் காம்பாற் செய்யப்படுவதென்பது 1"பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த, சீரியல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு" என்பதனானும், அது சயந்தன் வடிவாயதென்பது 2"இந்திர சிறுவன் சயந்த னாகென, வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்" என்பதனானும் அறியப்படும். இனி, ஆரிய மன்னர் அமர்க்களத்திலே தங்களுக்கெடுத்த குடையிற் காம்பைக் கையிற் பிடித்து ஆனைக் கழுத்திலிருத்திய ஆசிரியன் கையிற்றலைக் கோலாகக் காட்டியும் என்றுரைத்தலுமாம். குயிலாலுவம் - இமயமலைப் பக்கத்தொரு பகுதி. தெவ்வர் ஓடலாற் களம் அரசனதாயிற்று; ஈண்டு அரசன் செங்குட்டுவன் என்க. தவப்பெருங் கோலமென்றது, "சடையின ருடையினர் சாம்பற் பூச்சினர், பீடி கைப் பீலிப் பெருநோன் பாளர்" ஆகிய வடிவினை என்க. புதுவது என்றது முன்னொருவரும் செய்யாத தொன்றென இகழ்ந்தபடி. ஆரியமன்னர் காட்டி வணங்கித் துறந்து கொண்டோர் என்க; ஆரிய மன்னரென்னுந் தொகுதி யொற்றுமையானே காட்டி வணங்கித் துறந்து கொண்டோர் எனச் சிலர் வினை வேறு சிலர் வினையோடு முடிந்தது. வேற்செழியன் கோலங்கொண்டோர் தம்மேற் சீற்றங் கொண்டோன் கொற்றம் புதுவது என்றனன் என்க.


1. சிலப், 3 ; 114-5. 21. 2. சிலப். 3 ; 119-20