5. நடுகற் காதை


115




120

கறிவளர் சிலம்பிற் றுஞ்சும் யானையின்
சிறுகுரல் நெய்தல் வியலூ ரெறிந்தபின்
ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று
நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற்புறத் திறுத்துக்
கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி
உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக்
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்


114
உரை
121

       கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் - மிளகுக் கொடி படரும் மலைக்கண் உறங்கும் யானையினையுடைய, சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் - சிறிய கொத்தாகிய நெய்தற் பூக்களையுடைய வியலூரை அழித்து வெற்றி கொண்ட பின்னர், ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை - ஆத்தி மலராற்புனைந்த மாலையினையுடைய ஒன்பது சோழ அரசரை, நேரி வாயில் நிலைச்செரு வென்று - நேரிவாயி லென்னுமிடத்தே நிலைபெற்ற போரின்கண் வென்று, நெடுந் தேர்த் தானை யொடு இடும்பிற் புறத்து இறுத்து - உயர்ந்த தேரினையுடைய சேனையோடே இடும்பில் என்னு மூர்ப்புறத்தே தங்கி, கொடும்போர் கடந்து நெடுங்கடல் ஓட்டி - கொடிய போரினை வென்று நெடிய கடலிடத்தே நாவாயைச் செலுத்தி, உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை - தன்னொடு வெகுண்டு எதிர்த்த ஆரியவரசரை, கடும் புனற் கங்கைப் பேர் யாற்று வென்றோய் - விரைந்து செல்லும் நீரினையுடைய பெரிய கங்கையாற்றுக் கரைக்கண் வென்றோய்;

       யானையினையுடைய வியலூர் என்க. சாரியை நிற்க உருபும் பயனும் தொக்கன. ஆர்புனை ஒன்பது மன்னரை வென்றமை, 1"நின், மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா, வொத்த பண் பின ரொன்பது மன்ன, ரிளவரசு பொறா ரேவல் கேளார், வளநாடழிக்கு மாண்பின ராதலி, னென்பது குடையுமொருபக லொழித்து" எனவும், 2"ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோ, ரொன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து, நிலைச்செருவி னாற்றலை யறுத்து" எனவும் போந்தவற்றானறிக. நேரிவாயில் - உறையூர்த் தெற்கு வாயில தோரூர். நிலைச்செரு - நாடோறும் தொடர்ந்து நிகழும் போர். இடும்பில் - ஓரூர். கடலோட்டிய செய்தி 3"பொங்கிரும் பரப்பிற் கடல் பிறக்கோட்டிக், கங்கைப்போர் யாற்றுக் கரைபோகிய, செங்குட்டுவன்" என்பதனானுணரப்படும். ஆரிய மன்னர் - முன்னொரு கால் இவனுக்குத் தோற்றார் சிலருமாம். வென்று இறுத்துக் கடலோட்டி என்னும் பல்வேறு தொழிற்பட்ட வினையெச்சங்கள் வென்றோய் என்பதன் வெல்லுதற் றொழிலொடு முடிந்தன.


1. சிலப், 27 ; 117-22 2. பதிற்று. 5-ப் பத்துப் பதிகம்.

3. சிலப். 30. கட்டுரை, 12-5