5. நடுகற் காதை

125

மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க


125
உரை
126

       மண் ஆள் வேந்தே - இந்நில முழுதாளும் மன்னனே, நின் வாணாட்கள் - நின்னுடைய வாழும் நாட்கள், தண் ஆன் பொருநை மணலினுஞ் சிறக்க - தண்ணிய ஆன்பொருநை யாற்றின் மணலினும் மிகுவனவாக.

ஆன்பொருநை - சேரநாட்டுள்ளதோர் யாறு; இஃது ஆன் பொருந்தம் எனவும் பொருநை யெனவும் வழங்கும். ஓரரசரை வாழ்த்துங்கால் அவரை அவர் யாற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலான் இங்ஙனங் கூறினான். 1"சிறக்க நின்னாயுண், மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்க ரிட்ட மணலினும் பலவே" என வருதலுங் காண்க. சிறத்தல் - மிகுதல். வாணாள், மரூஉ முடிபு.


1. புறம், 42.