5. நடுகற் காதை


130

வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை


129
உரை
132

       வையம் காவல்பூண்ட நின் நல் யாண்டு - இவ்வுலகு காத்தற்றொழிலை மேற்கொண்ட நினது நன்றாகிய ஆண்டுகள், ஐயைந்து இரட்டி சென்றதற் பின்னும் - ஐம்பது முடிவுற்ற பின்னரும், அறக்கள வேள்வி செய்யாது - அறநூல்கள் கூறும் வேள்வியினைச்செய்யாதே, யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை - எவ்விடத்தும் வலிமிக்க போர்க்கள வேள்வியையே செய்பவனாயினை;

       அறக்கள வேள்வி - அறநூல்களுள் அரசர்க்கு விதிக்கப்பெற்ற இராசசூயமும் துரங்கவேள்வியும் போல்வன. மறக்கள வேள்வியாது என்பதனை, 1"நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரி திரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்குமுன்னே கடவுட் பலி கொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல, அரசனும் நாற்படையையுங்கொன்று களத்திற்குவித்து எருதுகளிறாக வாண்மடலோச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனா வேண்மாள் இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்" என வருதலானுணர்க.

       ஈண்டு ஐயைந்திரட்டி சென்றமை கூறுதலானும், பதிற்றுப்பத்தின் (5ம்) பதிகத்திலே, "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்" எனக் கூறப்படுதலானும், இக் காதையுள்ளே பின்னர் "நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை" என வருதலானும் செங்குட்டுவன் ஏறக்குறைய எழுபத்தைந்து யாண்டு உயிர் வாழ்ந்திருந்தனன் எனவும், ஐம்பத்தைந்து யாண்டு அரசுபுரிந்தனன் எனவும் கருதுதல் பொருந்தும்.


1. தொல், புறத், சூ, 21. (ந, உரை,)