5. நடுகற் காதை

155

இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு
உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே
நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை


155
உரை
158

       இளமை நில்லாது என்பதை - இளமைப் பருவம் நிலையாது என்பதனை, எடுத்து ஈங்கு உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா - இவ்வுலகத்து அறிவுடைய மக்கள் மேற் கோள் வாயிலாக எடுத்துரைத்தல் வேண்டா , திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே - திருமகள் தங்கிய பரந்த மார்பினையும் செங்கோலையும் உடைய வேந்தனே, நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை - நரைத்தலோடு முதிர்ந்த உடலை நீயும் பார்த்தனை ;

       ஞெமிர்தல் - பரத்தல். நீயுங் கண்டனையாகலான் உரைக்கல் வேண்டா என்க. நீயுங் கண்டனை என்றது நின் உடம்பும் நரைத்தலுடன் முதிர்ந்த தென்றபடி. நரைமுதிர் - நரைமிக்க என்றுமாம். 'கடற்கடம் பெறிந்த காவலனாயினும்' என்பது தொடங்கி. 'நரை முதிர் யாக்கை நீயுங் கண்டனை' எனபதன்காறும் யாக்கையும் செல்வமும் இளமையும் நில்லாவென்பது சான்றுகாட்டி நிறுவப்பட்டது.