5. நடுகற் காதை


160

விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும்


159
உரை
164

       விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர் - தேவர் வடிவத்தோடு துறக்கம் புக்க நல்ல உயிரானது, மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் - மக்கள் வடிவோடு இவ்வுலகின்கண் மீளினும் மீளும், மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் - மனிதவுடலை மேற்கொண்ட ஓர் நிலைபெற்ற உயிர், மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் - மன்னனே விலங்கின் உடலை அடையினும் அடையும், விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் - விலங்கினது யாக்கையினின்றும் விலகிய இனிய உயிர், கலங்குஅஞர் நரகரைக் காணினுங் காணும் - உள்ளம் நடுங்கற்குக் காரணமாய துன்பம் நுகரும் நரகரது யாக்கையை அடையினும் அடையும் ;

       நல்லுயிர் என்றார் அறஞ்செய்த வுயிராகலான். உருவின் எய்திய - உருவினை யடைந்த எனலுமாம். மறித்தல் - மீளல். தாம் செய்யுந் தீவினையானே தேவர் மக்களாகவும் மக்கள் விலங்காகவும் விலங்கு நரகராகவும் பிறத்தலுங் கூடுமென்றான். நரகர் -நரகர துடம்பிற்காயிற்று.