5. நடுகற் காதை

165

ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்


165
உரை
168

       ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது - ஆடுகின்ற கூத்தரைப் போல அரிய உயிரானது ஓரிடத்துச் சேர்ந்த வடிவத்துடன் எப்பொழுதும் நிலைபெற்று நடவாது, செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது - தான் செய்த வினையின் வழியதாய் உயிர் செல்லாநிற்கும் என்னுமது, பொய்யில் காட்சியோர் பொருள்உரை ஆதலின் - தெளிந்த அறிவினையுடையோரது உண்மை மொழியாமாகலான் ;

       கூத்தர் தாம் மேற்கொண்ட கூத்தினுக்கேற்ப வெவ்வேறு கோலம் எடுத்தல் போல உயிரும் தாம் செய்த வினைக்கேற்ப வெவ்வேறு வடிவினை யெடுக்குமென்றான். 1"ஆடு கூத்த ரணியேபோல, வேற்றோ ரணியொடு வந்தீரோ" 2"ஐயமுண்டோ ஆருயிர் போனாற், செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல்" என்பன காண்க. இயலாது, முற்று, பொருளுரை யாதலின் ஒருங்கு நின்றியலாது என முடிக்க. பொய்யில் காட்சி - ஐயந்திரிபில்லா அறிவு; பொருளுரை - மெய்யுரை; 3பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்" என்புழி இப்பொருட்டாதலுங் காண்க.

 


1. மணி. 12 : 51-2. 2. மணி, 6 : 158-9.
3.
மணி. 22 : 61.