5. நடுகற் காதை




20

அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும்
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த


17
உரை
21

       அகில் உண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை - அகிற் புகையினைக் கொள்ள விரித்த அழகிய மெல்லிய கூந்தலாகிய மேகத்தின் உள்ளே தோன்றும், மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் - முகமாகிய மதியினிடத்துள்ள புருவமாகிய வளைந்த கரிய வில்லின்கீழ் அமைந்த, மகரக்கொடியோன் மலர்க்கணை துரந்து - மகரமீனைக் கொடியாகவுடைய மன்மதனது மலரம்பு களையோட்டி, சிதர்அரி பரந்த செழுங்கடைத் தூது - சிதறிய செவ்வரி பரந்த கொழுவிய கண்ணின் கடையாகிய தூது, மருந்தும் ஆயது இம் மாலை என்று ஏத்த - முன்னர்ப் பாசறைக்கண் நமக்கு வருத்தஞ் செய்ததேயன்றி இம் மாலையில் அதற்கு மருந்தும் ஆகியது என்று புகழ ;

       கூந்தன் முகில், முகமதியம், புருவவில் எனுமிவை உருவகம். மலர்க்கணை துரந்து என்றது ஆடவரை வருத்துந் தொழிலால் அதனை வென்று என்றபடி. கண்ணென்பது வருவித்துச் சிலைக்கீழ் அமைந்த அரிபரந்த கண்ணின் கடையாகிய தூது என்க. கட்கடை - கடைக்கண்ணி னோக்கம் ; அந்நோக்கங் கண்டு சேறலின் அதனைத் தூது என்றார். பாசறைக்கண் உருவெளியாகத் தோன்றித் துன்புறுத்தியதாகலின், ஈண்டு மருந்துமாயது என்றார். 1"பிணியுமதற்கு மருந்தும்" என்பதுங் காண்க. உம்மை எச்சவும்மை. வாள்வலத்தர் தம் மார்பினை வரிமுலையால் வேதுகொண்டு செழுங்கடைத் தூதும் மருந்தும் ஆயதென்று ஏத்த என்க.


1. திருச்சிற். 5.