5. நடுகற் காதை

175

வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்


175
உரை
178

       வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் - விண்ணவர் புகழும் வீட்டு நெறியினை உனக்குத் தருகின்ற, நான் மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் - நான்கு வேதங்களிற் கூறப்படும் வேள்வியினைச் செய்யும் அந்தணர் கொண்டு, அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும் - அரிய மறைகளிடத்தே மன்னர்க்கென வுரைத்த உயர்ந்த நல்ல வேள்வியினை நீ செய்தல் வேண்டும்;

       வானவர் போற்றும் வழி - வீட்டு நெறி. அளிக்கும் வேள்வி யென இயையும்; அளிக்கும் வேள்விப் பார்ப்பான் என்பாருமுளர். அரசர்க்கு ஓங்கிய வேள்வி - இராசசூயம், பரிவேள்வி முதலியன. பார்ப்பானைக் கொண்டு என ஒரு சொல் வருவித்துரைக்க. அருமறை-ஓதவும் உணரவும் அரிய மறை.