வேள்விக்
கிழத்தி இவளொடுங் கூடி - வதுவைக் கிழத்தியாகிய இவளோடுங் கலந்து, தாழ் கழல் மன்னர்
நின் னடிபோற்ற - கழலணிந்த அரசர்கள் நினது அடியினைத் துதிக்க, ஊழியோடு ஊழி உலகங்
காத்து நீடுவாழியரோ நெடுந்தகையென்று - பல்லூழி இவ்வுலகினைக் காத்து நெடுந்தகாய்
நீடு வாழ்வாயாக என, மறையோன் மறைநா உழுது - மாடலனாகிய அந்தணன் மறையோதும் நாவாகிய
ஏரானே உழுது, வான்பொருள் - சிறந்த பொருளாகிய விதையினை, இறையோன் செவி செறுவாக
வித்தலின் - மன்னனது செவியே வயலாகக் கொண்டு விதைத்தலான்;
வேள்வி - மன்றல் வேள்வி. இனி,
வேள்விக்கிழத்தி என்பதற்கு வேள்வி செய்தற்கண் உடனிருக்கு முரிமையுடையாள் எனலும்
பொருந்தும். தாழ்தல் - தங்குதல்; தாழும் மன்னர் என்றியைத்தலுமாம். ஊழியோடூழி
- பல்லூழி. நாவாகிய ஏரால் எனவும், பொருளாகிய விதையை எனவும் உருவகத்தை விரித்துரைக்க.
|