5. நடுகற் காதை


190

வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி


189
உரை
194

       வித்திய பெரும்பதம் விளைந்து பத மிகுத்து துய்த்தல் வேட்கையின் - விதைத்த பெரும் பொருள் விளைய அவ்வுணவினை மிகுதியாக நுகரும் விருப்பத்தானே, சூழ்கழல் வேந்தன் - கழலினையணிந்த வேந்தன், நான்மறை மரபின் நயம் தெரி நாவின்-நால்வேத முறையானே நாற்பொருளை ஆராய்ந்து கூறும் நாவினையுடைய, கேள்வி முடித்த வேள்வி மாக்களை - பல்வகை நூற்கேள்விகளையும் முடித்த வேள்வி செய்தற்குரிய அந்தணரை, மாடல மறையோன் சொல்லிய முறைமையின் - மாடலனாகிய பார்ப்பான் கூறிய முறைமையானே, வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி - வேள்விச் சாந்தியாகிய விழாவினைச் செய்ய ஏவி;

       பெரும்பதம் - வான் பொருள். பதம் - உணவு. நாவின்மாக்கள், கேள்வி முடித்த மாக்கள் எனத் தனித்தனி கூட்டுக. சாந்தி யென்பது 1"ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு" என்பதன்கண் வேள்வி யென்னும் பொருளதும், 2"கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி" என்பதன்கண் விழா என்னும் பொருளதுமாகலின் வேள்வியாகிய சாந்தியென்றாதல், சாந்தியாகிய விழா வென்றாதல் விரித்துரைக்க. தாழ்வு தீரச் செய்யப்படுவனவாகலின் அவை சாந்தியெனப்படுவனவாயின.


1. பதிற். 6. பதிகம். 2. தே. 2. 47 ; 10.