5. நடுகற் காதை

195




200

ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப்
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி
நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள்
தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம்
மன்னவர்க் கேற்பன செய்க நீயென
வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச்


195
உரை
202

       ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி - ஆரிய மன்னரைப் பெயர்தற்கரிய சிறையினின்று விடுத்து, பேர் இசை வஞ்சி மூதூர்ப்புறத்து - பெரும்புகழ் பரந்த வஞ்சி நகரின் புறத்தே, தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம் பொழில் - ஆழ்ந்த நீரை வேலி யாகவுடைய தண்ணிய பொலிவுற்ற பூஞ்சோலைக்கண் உள்ள வேள் ஆவிக்கோ மாளிகை காட்டி - வேளாகிய ஆவிக்கோவின் பெயர் பொருந்திய மாளிகையை அவர்கள் இருக்குமாறு காட்டி , நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் - நல்ல பெரிய யாகத்தினை முடித்த பிற்றை நாளில், தம் பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லி - அவர் தமது பெரிய நீண்ட நகரத்தினை அடைவதுங் கூறி, அம் மன்னவர்க்கு ஏற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி - அவ்வாரிய வரசர்க்கு ஏற்ற தகவுகளை நீ செய்வாயாகவென்று வில்லவன் கோதையை மகிழ்ச்சியோடே ஏவி;

       வேளாவிக்கோ மாளிகை - வேளாகிய ஆவிக்கோவின் பெயராற் கட்டப்பட்ட மாளிகை; இது வேண்மாடம் எனவும் படும்; இது விருந்தின் மன்னர் தங்குதற்கமைத்த மாளிகை போலும்? நீக்கிக் காட்டிச் சொல்லி நீ ஏற்பன செய்கவென வில்லவன் கோதையை ஏவி யென்க.