5. நடுகற் காதை




25

இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்
கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில்
திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும்
மாந்தளிர் மேனி மடவோர் தம்மால்
ஏந்துபூண் மார்பின் இளையோர்க் களித்துக்


22
உரை
26

       இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்ப - பெரிய கொவ்வைக் கனியும் பவளமும் போன்ற வாய் சிறு நிலாவொளியினைப் பரப்ப, கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியின் - கரிய கெண்டைமீன் பிறழ்கின்ற அழகிய காட்சியோடே, திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் - திருந்திய பற்கள் சிறிது தோன்றிய புதிய நகையினையும், மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் - மாந்தளிர் போலும் மேனியினையுடைய மடந்தையரால், ஏந்துபூண் மார்பின் இளையோர்க்கு அளித்து - பூண் அணிந்த மார்பினையுடைய காளையர்க்கு உதவி ;

       துவர் - செம்மையுமாம். விரிப்ப அரும்பிய மூரல் என்க. கயல் - கயல் போலுங் கண். ஏத்த அரும்பிய மூரல் என முடியும். வாள்வலத்தராகிய இளையோர்க்கு மாலைப் பொழுதானது மடவோரால் மூரலையும் அளித்தென்க.