அறக்களத்து
அந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று-தன்மாசனத்துக்
கருத்தாக்களுள் புரோகிதனும் சோதிடனும் சிறப்புடைய சிற்பியரோடுஞ் சென்று, மேலோர்
விழையும் நூல் நெறி மாக்கள் - தேவரும் விரும்பும் சிற்ப நூலுணர்ந்த கம்மியரால்,
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து - பகுதிப்பட வகுத்த பத்தினிக்கோட்டத்தில்;
முன்னரும், 1"ஆசான் பெருங்கணி யறக்களத்
தந்தணர்" எனக் கூறினமை காண்க. சிறப்பு - தொழிற்சிறப்பு; அரசன்பாற்பெற்ற வரிசையுமாம்.
நூனெறிமாக்கள் அந்தணர் முதலியோரோடுசென்று வகுத்த பத்தினிக் கோயில் என்னலுமாம்;
அரசன் அந்தணர் முதலானோருடன் சென்று என்றுரைத்தலுமாம். கரு நிலையும் பகுதி மண்டபமும்
பெரு மண்டபமும் என வகைப்படலான் பால்பெற வகுத்த என்றார்.
|