5. நடுகற் காதை




40

முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன்
குடிபுறந் தருங்கால் திருமுகம் போல
உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க


37
உரை
40

       முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன் - ஏனை மன்னரது முடியின் புறத்தினைத் தேய்க்கின்ற கழலணிந்த அடியினையுடைய குட்டுவன், குடிபுறந் தருங்கால் திருமுகம்போல - குடிகளைக் காக்குங் காலத்து விளங்கும் அவன் அழகிய முகத்தினை யொப்ப, உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் - உலகத்தார் வணங்க வானின்கட் டோன்றிய விரிந்த கதிர்களையுடைய திங்களை, பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க - யாவரும் போற்றும் மூதூரிலுள்ளார்க்கு அறிவித்து விலக ;

       மற்றைய அரசர் இவன் அடிக்கண் தம்முடி பொருதத் தலை வணங்கலான் அம்முடியினைக் கழல்தேய்ப்பதாயிற்றென்க. பகையொடு பொரூஉங் காலத்தன்றி ஏனைக்காலத் தெல்லாம் இனிய முகத்துடன் இருத்தலான், "குடிபுறந் தருங்காற் றிருமுகம்போல" என்றார்.

       மலரவிழ் மாலை இளையோர்க்கு மடவோர் தம்மால் மூரலையும் அளித்து மைந்தர்க்கு அகவன் மகளிரான் விருந்துமயர்ந்து மதியத்தை மூதூர்க்குக் காட்டி நீங்க என முடிக்க.