"குமரியொடு.....
திறமுரைப்பர் மன்"
குமரியொடு வடஇமயத்து ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக்
கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை - தெற்கண்
குமரியும் வடக்கண் இமயமுமாகிய அவ்விரண்ட னிடைப்பட்ட உலகினைத் தன் ஆணை யானே ஆண்ட
சேரலாதனுக்கு விளங்கும் ஒளியினையுடைய ஞாயிற்றுச் சோழன் மகள் பெற்ற புதல்வனாகிய
கொங்கரது போர்க்களத்தே களவேள்வி செய்து கங்கையாகிய பெரிய யாற்றின் கரைக்கண்ணே
சென்ற செங்குட்டுவன் ஆரிய மன்னரிடத்தே சினத்தை மிகுத்து ஆண்டு நின்றும் வஞ்சி நகரத்து
வந்திருந்த காலத்து;
இமயத்து உலகு ஒரு மொழி வைத்து என
மாறுக. ஒரு மொழி, ஆணை. ஞாயிற்றுச் சோழன் - சூரிய வங்கிசத்துச் சோழன் என்பர்;
அரும்பத உரையாசிரிய . . . ர். 1"சேரலாதற்கு...
சோழன் றன்மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள் முன்னோன்" என அடியார்க்கு நல்லார்
கூறுதலின் சோழன் மகள் பெயர் சோணை யென்பது அவர் கருத்தாகும்; அதற்கு மேற்கோள்
புலப்பட்டிலது. பதிற்றுப்பத்தில் 2"சோழன்
மணக்கிள்ளி யீன்ற மகன்" என வருதலின், மணக்கிள்ளி யென்பது அவள் பெயராதல் வேண்டும்.
கொங்கர் செங்களம் வேட்டதனை, 3
"நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி,
பகைபுறத்துத் தந்தனராயினு மாங்கவை, திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன" என முன்னர்க்
கூறப்பட்டுளது. கங்கை யாற்றுக் கரை போகியது தன் தாயினைக் கங்கையில் நீராட்டுதற்குக்
கொண்டு போயது போலும்.
வடஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை
மாலை சூட்டி உட னுறைந்த இருக்கை தன்னில் ஒன்று மொழி நகையினராய்த் தென்றமிழ் நாடு
ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலி கயல் பொறித்த நாள் எம்போலு முடிமன்னர் ஈங்கு இல்லைபோலும் என்ற வார்த்தை - வடநாட்டு
ஆரியவரசர் அவ்வட நாட்டிலே ஓர் மங்கையை மணமுடித்துச் சேர்ந்து தங்கிய இருப்பிடத்தே
தம்மில் ஒத்த சொல்லுடனே எள்ளல் நகையினை யுடையராய்த் தென்றிசைக்கண்ணதாகிய தமிழ்நாட்டினை
யாளும் அரசர் போரினை விரும்பித் தருக்குற் றெழுந்து போந்து மின்னுக் கொடி படியும்
இமயமலை உச்சியிற் சிறப்புற்ற வில்லும் புலியுங் கயலுமாய இவற்றை எழுதிய காலத்து எம்மையொத்த
முடியுடைப் பேரரசர் இந்நாட்டிலில்லை போலும் என்று கூறிய மொழியை;
ஒன்று மொழி - தம்மில் வேற்றுமை
யின்றியே தமிழ் வேந் தரை இகழ்ந்துரைத்த மொழி, புகன்று - தருக்குற்று. ஈங்கில்லை
யென்றது இருப்பின் பொறித்த லாற்றார் என்னுங் குறிப்பிற்று. போலும், ஒப்பில் போலி.
அங்கு வாழும் மாதவர் வந்து அறுவுறுத்தவிடத்து
ஆங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல் இமயமால் வரைக் கற்
கடவுளாம் என்ற வார்த்தை இடம் துரப்ப- அந்நாட்டு வாழுந் தாபதர் வந்து அவ்விடத்தே
அறிவுறுத்திய காலத்து இயல்பானே உருள்கின்ற மாணிக்க வட்டினைக் குறுந்தடியார் செலுத்தியது
போலப் பெரிய இமயமலைக் கல் கடவுளாம் என்று கூறிய மொழி தன்னை இடத்தினின்றுந்
துரப்ப;
இல்லைபோலு மென்ற வார்த்தையை
அறிவுறுத்தவிடத்தென்க. மாதவர் வந்து கூறியதனை, 4
"இமையத் தாபத ரெமக்கீங் குணர்த் திய, அமையா வாழ்க்கை யரசர் வாய்மொழி" என
முன்னர்க் கூறியது கொண்டுணர்க. 'இமய மால்வரைக் கல் கடவுளாம் என்ற வார்த்தை' என்றது
5 "விற்றலைக் கொண்ட வியன்பே
ரிமயத்துக், கற்கால் கொள்ளினுங் கடவுளாகும்" என்றதனை யுட்கொண்டது. வட்டு - உண்டை;
6 'அரங்கின்றி வட்டாடி யற்றே'
என்ற குறளுரையிற் காண்க. இயல்பாக உருள்கின்ற வட்டினைக் குணில் கொண்டு துரந்ததுபோல்
என்னும் உவமையால், மாதவர் அறிவுறுத்த பொழுதே சினம்மிக்கு மேற்செல்லக் கருதி யிருந்தானை
இமயமலையிற் கல் கடவுளாம் என்ற வுரை விரைந்தேகத் தூண்டிய தென்பது பெற்றாம். துரப்பச்
சென்று என ஒரு சொல் வருவிக்க.
ஆரிய நாட்டு அரசு ஓட்டி அவர் முடித்தலை
அணங்காகிய பேர் இமயக் கல் சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின் கங்கைப்பேர்
யாற்று இருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந் தரு வெம்மை நீங்கி வஞ்சிமாநகர்
புகுந்து நில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டித் தடமுலைப் பூச லாட்டியைக்
கடவுள் மங்கலம் செய்த பின்னாள் கண்ணகி தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி
- ஆரிய நாட்டு மன்னரைப் புறங்கண்டு அம்மன்னரது முடிசூடிய தலைக்கண் தெய்வமாகிய பெரிய
இமயமலைக் கல்லை ஏற்றி மீண்டு வந்து விரும்பிற கொள்கையோடே கங்கை யாற்றுக்
கரையிலே தங்கிக் கடவுளுருவாய கண்ணகியை நீர்ப்படை செய்து வெவ்விய வெகுளியாகிய செற்றம்
நீங்கப்பெற்று வஞ்சி நகரத்துப் போந்து வையங் காவலர் பலரும் தமது உயர்ந்த முடியானே
வணங்கும் தெய்வ வடிவு செய்வித்துப் பெரிய முலையானே பூசல் செய்தவளாய கண்ணகியைப்
பிரதிட்டை செய்த பின்னாளில் கண்ணகியின் கோயிலில் நிலமன்னர் செலுத்தும் திறையினைக்
கேட்டிருந்த காலை;
அவர் என்றது கனக விசயரை; 7
"கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் ....கனக விசயர்தங் கதிர்முடி யேற்றி"
எனப் போந்தமை காண்க. கற்றெய்வ மாதலால் அணங்கென்றார். நங்கை யென்றது நங்கையின்
வடிவு எழுதிய கல்லினை என்க. படிமம் - தெய்வ வடிவு. 'வடவாரியர்' என்பது முதல் 'கடவுண்
மங்கலஞ் செய்த பின்னாள்' என்பதன்காறும் முன் செய்ததனைக் கொண்டு கூறியதாக்கி
யுரைக்க.
அலம்வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடி யாடிய கருமுகில் தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவ லன்றன்
வினை யுருத்துக் குறுமகனாற் கொலையுண்ணக் காவலன் றன் இடஞ் சென்ற கண்ணகிதன் கண்ணீர்
கண்டு மண்ணரசர் பெருந் தோன்றல் உண்ணீர் அற்று உயிரிழந்தமை மாமறை யோன் வாய்க்
கேட்டு - சுழற்சி கொண்ட திங்கள் போலும் முகத்தில் இரண்டு செங்கயல் போலும் சிவந்த
கண்கள் நீரினைச் சிந்தப் புழுதி படிந்த கரிய மேகம் போலுங் கூந்தல் தனது முதுகினை
மறைக்க அறக்கடவுளை இகழ்ந்து கோவலன் தனது வினை பயனளிக்கத் தோன்றியதனால் கீழோனொருவனால்
கொலை செய்யப்பட அதன் பொருட்டுப் பாண்டிய மன்னனிடம் போய் வழக்குரைத்த கண்ணகியின்
கண்ணீரைக் கண்டு நில மன்னருட் பெருந் தலைவனாய பாண்டியன் உள்ளத்தின் இயல்பு கெட்டு
உயிரிழந்ததனை மாடலனாகிய அந்தணன் கூறக் கேட்டு;
8
"அறனெனு மடவோய் யான் அவலங்கொண்டழிவலோ" என்றதனால் அறம்பழித்தமை அறிக. உருத்து
- உருத்தலான். குறு மகன்- கீழ் மகனாகிய பொற்கொல்லன்.மறையோன் - மாடலன்; அவன்
வாய்க் கேட்டமை 9 "வலம்படு தானை
மன்னவன் றன்னை . . . .
என்பதிப் பெயர்ந்தே னென்றுயர்
போற்றிச். செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க" என்றமையாலறிக. உமிழப்
புதைப்பப் பழித்துக் காவலனிடஞ் சென்ற கண்ணகி என்க.
மாசாத்துவான் தான் துறப்பவும் மனைக்கிழத்தி
உயிர்இழப்பவும் எனைப் பெருந்துன்பம் எய்திக் காவற் பெண்டும் அடித் தோழியும் கடவுட்
சாத்துனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் சேயிழையைக் காண்டும் என்று மதுரைமா நகர்
புகுந்து- மாசாத்துவான் துறவு பூணவும் அவன் மனைவி உயிர்துறக்கவும் மிக்க பெருந் துன்பமுற்றுக்
காவற்பெண்டும் அடித்தோழியும் கடவுளாகிய சாத்தனை மணந்து அவனுடன் வாழ்ந்த தேவந்தி
யும் ஒருங்கு சேர்ந்து கண்ணகியைக் காண்போம் என்று கூறி மதுரைமா நகரத்தை அடைந்து;
மாசாத்துவான் துறந்ததும் அவன் மனைவி
உயிரிழந்ததும், 10 "மைந்தற் குற்றது
மடந்தைக் குற்றதுஞ், செங்கோல் வேந்தற் குற் றதுங் கேட்டுக், கோவலன் றாதை கொடுந்துய
ரெய்தி ... துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும்" எனவும், "துறந்தோன் மனைவி மகன்
றுயர் பொறாஅ, ளிறந்த துயரெய்தி யிரங்கிமெய் விடவும்" எனவும் முன்னர்க் கூறப்பட்டமை
காண்க. கடவுட் சாத்தனுட னுறைந்த தேவந்தி என்றது சாத்தனாகிய ஐயனை மணந்து அவனோடு
வாழ்ந்த தனை; இது, 11 "தேவந்திகையைத்
தீவலஞ் செய்து, நாலீராண்டு நடந்ததற் பின்னர் . . . . நீவா வென்றே நீங்கிய சாத்தன்'
என மேல் வருதலா னறியப்படும். காவற்பெண்டு - செவிலி. அடித் தோழி - சிலதி. தேவந்தி
- கண்ணகியின் பார்ப்பனத் தோழி.
முதிரா முலைப்பூசல் கேட்டு ஆங்கு
அடைக்கலம் இழந்து உயிர் இழந்த இடைக்குல மகளிடம் எய்தி ஐயை அவள் மகளோடும் வையை
யொருவழிக் கொண்டு மாமலை மீமிசையேறிக் கோமகள் தன் கோயில்புக்கு நங்கைக்குச்
சிறப்பு அயர்ந்த செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர்மன் - கண்ணகி தன் இளங் கொங்கையாற்
செய்த பூசலைக் கேள்வியுற்று அப்பொழுதே அடைக்கலப் பொருளை இழந்ததனால் உயிர்துறந்த
இடையர் குலமகளாய மாதரியின் இருக்கையை யடைந்து அம் மாதரியின் மகளாகிய ஐயையோடும்
வையை யாற்றுக் கரை வழியே சென்று மலையின் உச்சியிலேறிக் கண்ணகி கோயிலை அடைந்து
பத்தினிக் கடவுட்கு விழாச் செய்த செங்குட்டுவனுக்குத் தம் வரலாறு கூறுவார்;
முதிரா முலைப்பூசல் என்றது மதுரையை
யெரித்ததனை யென்க. மாதரி உயிரிழந்தமை, 12
"தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து. . . . அடைக்கல மிழந்தே னிடைக்குல மக்காள், குடையுங்
கோலும் பிழைத்த வோவென, இடையிரு ளியாமத் தெரியகம் புக்கதும்" என்
பதனால் அறியப்படும். மாமலை -திருச்செங்குன்
றென்னும் மலை. செங்குட்டுவன் கண்ணகிதன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழிக் காவற்பெண்டும்
அடித்தோழியும் தேவந்தியும் ஐயையோடு கோயில்புக்கு உரைப்பர் என்க. மன், அசை.
|