6. வாழ்த்துக் காதை



11.

   வஞ்சிமகளிர் சொல்

வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான்
பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்;
கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச்
செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்
தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;
செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென்
றெங்கோ முறைநா இயம்ப இந் நாடடைந்த
பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்
பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்;



11
உரை
11

"வஞ்சியீர் . . . வம்மெல்லாம்."

        வஞ்சியீர் வஞ்சி இடையீர் மறவேலான் பஞ்சுஅடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்-வஞ்சி நகரத்து மங்கைமீர் வஞ்சிபோலும் இடையுடையீர் வலிமிக்க வேற்படையை யுடையான்றன் செம்பஞ் சூட்டிய அடியினையுடைய தோழிமீர் எல்லீரும் வம்மின், கொங்கையாற் கூடற்பதி சிதைத்துக் கோவேந்தைச் செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் - தன் முலைக் கண் எழுந்த தீயானே மதுரை நகரினை அழித்து அந்நகரின் பேரரசனைத் தனது செவ்விய சிலம்பானே வென்றி கொண்டா ளைப் பாடுவோம் நீவிர் யாவிரும் வம்மின், தென்னவன்றன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம் - பாண்டியன் மகளைப் பாடுவோம் நீவிர் யாவிரும் வம்மின், செங்கோல் வளைய உயிர்வாழார் பாண்டியர் என்று எங்கோ முறைநா இயம்ப - பாண்டிய மன்னர் தமது செங்கோல் வளையின் உயிரோடு கூடி வாழ்தலைச் செய்யார் என எமது மன்னனாய சேரனது முறைமையினை யுடைய நாவானது கூற, இந்நாடு அடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் - இந்நாட்டினை யடைந்த பசிய தொடியினையுடைய பாவையைப் பாடுவோம் யாவிரும் வம்மின், பாண்டியன்றன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம் - பாண்டியன் மகளைப் புகழ்ந்து பாடுவோம் யாவிரும் வம்மின்;

       
இதிற் கூறப்பட்டவர் செங்குட்டுவன் பரிகரத்தின் மகளிர். பாண்டியர் செங்கோல் வளைய உயிர் வாழார் என்பதனை, 1 ''செங்கோல் வளைய வுயிர் வாழாமை, தென்புலங் காவன் மன்னவற் களித்து'' என முன்னர்க் கூறியதூஉங் காண்க. முன்னர்ப் பாண்டியன் உயிர்நீத்தமையை இவன் புகழ்ந்தபடி கருதி ''எங்கோ முறை நா வியம்ப'' என்றார்.



1 சிலப். 28 : 212-3.