6. வாழ்த்துக் காதை



13.

   வாழ்த்து

தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின் நீர்,
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை
சூழு மதுரையார் கோமான்றன் தொல்குலமே;




13
உரை
13

''தொல்லை . . . தொல் குலமே''

        தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின் நீர் கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ - முன்னைத் தீவினை காரணமாகத் துன்பமுழந்த கண்ணகியின் கண்ணினின்றொழு கும் நீர் கொல்லத் தன் உயிரையிழந்த மன்னர் மன்னன் வாழ் வானாக, வாழியரோ வாழி வருபுனல் நீர் வையை சூழும் மதுரை யார் கோமான்றன் தொல்குலமே-எஞ்ஞான்றும் வற்றா தொழுகும் நீரினையுடைய வையையாறு சூழ்ந்த மதுரைப் பதியார்க் கரசனது தொன்றுதொட்டு வருங் குலம் நீடு வாழ்வதாக;

       
கண்ணினீர் கொல்ல வுயிர் கொடுத்த என்றது அவளுற்ற துயரினைப் பொறாது இறந்ததனை; 1 ''கண்ணகி தன் கண்ணீர் கண்டு மண்ணரசர் பெருந் தோன்ற லுண்ணீரற் றுயிரிழந்தமை'' என முன்னர்க் கூறியதுங் காண்க. தொல்குலம்-படைப்புக் காலந்தொட்டு வருங் குலம்; 2 ''வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண் பிற் றலைப்பிரித லின்று'' என்னுங் குறளுரையிற் பழங்குடி என்பதற்குச் சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருங் குடி எனப் பரிமேலழகர் உரைத்தமை காண்க.


1 சிலப். 29 ; உரைப்பாட்டு மடை.
2
குறள். 955. வி-உரை