6. வாழ்த்துக் காதை



16.

   அம்மானை வரி

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை
ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை
சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை;



16
உரை
16

''வீங்குநீர் . . . அம்மானை''

        வீங்குநீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர்கோன் ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை - கடலை எல்லையாகக் கொண்ட உலகினை ஆட்சி செய்து இந்திரனுடைய உயர்ந்த அரணினைக் காத்த வலியோன் யார், ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர்விசும்பில் தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை - உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன் யாவ னென்னின் உயர்ந்த வானின்கண் அசைகின்ற மூன்று மதிலினை அழித்த சோழனாவான், சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை - அத்தகைய சோழனது புகார் நகரத்தினைப் புகழ்ந்து பாடுக;

       
வீங்குநீர் - கடல், பாடு - பாடுவோமாக என்றலுமாம். ஏலும் ஓரும் அசை. பாடு, வியங்கோள்; 1 'பெறுக நன் மணம் விடு பிழை மணமெனவே' என்ற விடத்து விடு என்பது வியங்கோட் பொருளில் வருதல் காண்க. அம்மனை யென்பது பல்வரிக் கூத்துள் ஒன்றாகிய மகளிர் விளையாட்டு; விளையாடுங்கால் ஒருவர் கருதியதோர் பொருள்பற்றி வினாவுதலும், மற்றொருவர் அதற்கு விடை கூறுதலுமாக அம்மானை யென்னுஞ் சொல்லினை யமைத்து அம்மனைச் செய்யுள் பாடுதல் மரபு; வினாவின்றியும், அம்மானாய் எனவமைத்துப் பாடுதலுண்டு. வேட்கை மிகுதியால் அம்மனை முன்னிலையாகச் சோழனைப் பாடினாரென்க.


1 சிலப். 24 : 90.