6. வாழ்த்துக் காதை

17.
புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்
குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை
குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த
கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை
காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை;

17
உரை
17

''புறவுநிறை . . . அம்மானை''

        புறவு நிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை-புறா வொன்றன் பொருட்டுத துலாத்தின்கண் ஏறி விண்ணவர் போற்றத் தன் உடம்பினை அரிந்த மன்னவன் யார், குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த கறவை முறை செய்த காவலன்காண் அம்மானை - தன்னுடம்பினை யரிந்த மன்னவன் யாவனென்னின் வாயிலின் முன்வந்த ஆவின் பொருட்டுத் தன் மகன்மீது தேர்க் காலைச் செலுத்தி முறை செய்த வேந்தனான்,காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை-அத்தகைய மன்னனது பொலிவு பெற்ற புகார் நகரினைப் புகழ்ந்து பாடுக;

       
குறைவுஇல் உடம்பு-அரச இலக்கணத்திற் குறைவு படாத உடம்பு. புறவு நிறை புக்கதனையும் கறவை முறை செய்ததனையும் முன்னர் 1 வழக்குரை காதையில் உரைத்தமையுங் காண்க.

 


1 20 : 51-5.