6. வாழ்த்துக் காதை



18.

   ''கடவரைகள் . . . அம்மானை''

கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண
வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யா ரம்மானை
வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக் கெட்டுங்
குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்கா ணம்மானை
கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை;



18
உரை
18

''கடவரைகள் . . . அம்மானை''

        கடவரைகள் ஓர் எட்டும் கண்ணிமையா காண வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை - திசை யானைகள் எட்டும் தம் கண் இமைக்கப் பெறாதனவாய் வெருவிப் பார்க்க இமயமலை நெற்றியில் நீண்ட புலியினை எழுதியோன் யார், வட வரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் குடைநிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை - இமயமலையில் நீண்ட புலியினைப் பொறித்தோன் எட்டுத் திக்குகளையும் தம் குடை நிழலில் வைத்துக் காத்த மன்னனாவான், கொற்றவன் றன் பூம்புகார் பாடேலோர் அம்மானை - அத்தகைய மன்னனது பொலிவுற்ற புகார் நகரினைப் புகழ்ந்து பாடுக;

கடவரை - மதமலை; யானை; வெளிப்படை.