6. வாழ்த்துக் காதை

19.
அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார்
தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை
தம்மனையிற் பாடுந் தகையெலாந் தார்வேந்தன்
கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை
கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன்
அம்மென் புகார்நகரம் பாடேலோ ரம்மானை;

19
உரை
19

''அம்மனை தங்கையில் . . . அம்மானை''

        அம்மனை தம் கையிற் கொண்டு அங்கு அணியிழையார் தம் மனையிற் பாடும் தகையேலோர் அம்மானை - அழகு செய்யும் அணி கலன்களையுடைய மடவார் தம் மனையின்கண் அம்மனை யாடுங்காயைத் தமது கையிலே கொண்டு பாடாநிற்பர், தம் மனையிற் பாடும் தகையெலாம் - அவர் அங்ஙனம் பாடும் இயல்பெல்லாம், தார்வேந்தன் கொம்மை வரி முலைமேற் கூடவே அம்மானை - ஆத்தி மாலையையுடைய சோழ மன்னன் தமது திரண்ட தொய்யிலையுடைய முலையிடத்துக் கூடுதற்கேயாம், கொம்மை வரி முலைமேற் கூடில் குலவேந்தன் அம்மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை - அங்ஙனம் அவன் கூடினால் அவ்வேந்தனது அழகிய புகார் நகரத்தினைப் புகழ்ந்து பாடுகம்;

       
இஃது அம்மனை யாடுகின்றாரைக் கண்ட பின்பு தாமும் அம்மனையாடுகின்றார் கூற்றாகவுள்ளது. பாடா நிற்பர் என முடித்து அங்ஙனம் பாடு மியல்பெல்லாம் கூடவே யென்றுரைக்க. அவன் கூடின் யாமும் பாடுவேமாக என்க.