''ஓரைவர் . . . ஊசல்''
ஓரைவர் ஈரைம்பதின்மர் உடன்று எழுந்த போரில் - ஐவரும் நூற்றுவரும் தம்முள் வெகுண்டு
முற்பட்டுச் செய்த செருவில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன்
மலையன் திறம்பாடி - பெருஞ் சோறாகிய மிக்க உணவை வரையாது கொடுத்த சேரனது இயல்பினைப்
புகழ்ந்து, கார்செய் குழல்ஆட ஆடாமோ ஊசல் - முகிலையொத்த கூந்தல் அலையும்படி ஊசல்
ஆடுவோம், கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் - கடம்பு தடிந்தவாற்றினைப் புகழ்ந்து
ஊசலாடுவோம்;
ஐவர்
- பாண்டவர் ஐவர்; ஈரைம்பதின்மர் - கௌரவர் நூற்றுவர்; இவை தொகைக் குறிப்புச்
சொற்கள். இருதிறச் சேனைக்கும் வரையாதளித்த வென்க. 1
''அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம்
பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்''
என்றார் பிறரும். சேரன், பொறையன், மலையன் என்பன சேரர் குடிப் பொதுப் பெயர்;
ஒரு பொருள்மேல் வந்தன. செய், உவமவுருபு.
|