6. வாழ்த்துக் காதை



25

வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான்
மன்பதைகாக் குங்கோமான் மன்னன் றிறம்பாடி
மின்செய் இடைநுடங்க ஆடாமோ வூசல்
விறல்விற் பொறிபாடி ஆடாமோ வூசல்;




25
உரை
25

''வன்சொல் . . . ஊசல்''

        வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி ஆண்ட - கொடுஞ் சொல்லினையுடைய யவனரது வளமிக்க நாட்டினையும் இமயமலையினையும் தென் குமரியையும் ஆண்ட, செரு வில் கயல் புலியான் - போர்க்குரிய வில் கயல் புலி இவற்றை யுடையனாய, மன்பதை காக்குங் கோமான் மன்னன் திறம் பாடி மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் - குடிகளைப் புரக்குந் தலைவனாகிய சேரவரசனது பண்புகளைப் புகழ்ந்து மின்போன்ற இடை துவள ஊசல் ஆடுவோம், விறல் விற் பொறி பாடி ஆடாமோ ஊசல் - வெற்றி பொருந்திய வில் இலச்சினையைப் புகழ்ந்து ஊசல் ஆடுவோம்;

        1 ''வன்சொல் யவனர் வளநாடாண்டு'' என முன்னருங் கூறினார். 2 '' நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து'' என்பதுங் காண்க. மூவேந்தருள் ஒருவன் பெருமை கூறுமிடத்து ஏனையிருவருடைய கொடியையும் இலச்சினையையும் அவனுக்கேற்றி யுரைத்தல் வழக்கு; 3''தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற கயற்புலி, மண்டலை யேற்ற வரைக'' என முன்னர்க் கூறினமையுங் காண்க..


1 சிலப். 28 : 141
2 பதிற். 2: பதிகம்.
3 சிலப். 25 : 171-2.