''பாடல்சால் . . . பாடல்''
பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாடமதுரை மகளிர் குறுவரே - பவளமாகிய உலக்கையால்
புகழ்மிக்க முத்தினைக் குற்றுவாராகிய மாளிகைகளையுடைய மதுரை நகரத்து மங்கையர், வானவர்கோன்
ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் - இந்திரன் அளித்த
பூணாரம் விளங்கிய தோளினையுடைய பாண்டியனது கயற்கொடியினைப் புகழ்ந்து பாடும் பாடலே
சிறந்த பாடல், வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் - உள்ளத்தை வாட்டுகின்ற
வேப்ப மாலையினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடல்;
பாடல்சால் - புலவர் பாடுதற்கமைந்த வென்றுமாம். 1
''பவளவுலக்கை கையாற் பற்றித், தவள முத்தங் குறுவாள்'' என முன்னர்ப் போந்தமையுங்
காண்க. குறுவர் என முற்றாக்கி அங்ஙனங் குறுவோர் பாடும் என வருவித்துரைத்தலுமாம்.
நெஞ்சு-மகளிருள்ளம். உணக்குந் தாரினைப் பாடு மென்க. கடல்வளங் கூறியவாறு.
|