''ஆங்கு . . . வாழ்கவென்று''
ஆங்கு நீணில மன்னர் நெடுவிற்
பொறையன் நல் தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது - நெடிய விற்பொறியையுடைய
சேரனது நல்ல தாளினை வணங்காராகிய நிலவேந்தர்க்கு அவனை வாழ்த்தல் அரிதாகும், சூழ்
ஒளிய எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடுழி செங்குட்டுவன் வாழ்கவென்று - ஒளி பொருந்திய
எமது கோமகளாகிய பத்தினிக் கடவுளும் செங்குட்டுவன் நீடூழி வாழ்வானாக என்று வாழ்த்தினாள்
என்க.
ஆங்கு,
அசை. ''வானவ னெங்கோ மகளென்றாம்'' என இக்காதையுள் முன்னரக் கூறினமையின் ஈண்டும்
கண்ணகியை எங்கோ மடந்தை யென்றார். தெய்வமாயினமையின் 'சூழொளிய' என்றார். உம்மை
சிறப்புடன் எச்சமுமாம். மடந்தையும் ஏத்தினாள் என்றதனால் ஏனோர் வாழ்த்துதல் கூற
வேண்டாவாயிற்று. தொழார் தமக்கு வாழ்த்திப் பயன்கோடல் அரிதென அவர் சிறுமை கூறியபடி.
மூவேந்தர்
பெருமையுங் கூறி வாழ்த்துதலின் இது வாழ்த்துக் காதையாயிற்று.
இது
கொச்சகக் கலி.
வாழ்த்துக்
காதை முற்றிற்று.
|