6. வாழ்த்துக் காதை



5.

தேவந்தி யரற்று

செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன்
மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை உயிர்வீவுங் கேட்டாயோ தோழீ
அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ;



5
உரை
5

"செய்தவ மில்லாதேன் . . . தோழீ"

        செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்ட நாள் - முன்னை அறஞ் செய்திலேனாகிய யான் தீய கனவினை நீயுரைக்கக் கேட்ட அந்நாளில், எய்த வுணராது இருந்தேன் மற்று என் செய்தேன் - பொருந்த அறியாதே யிருந்த யான் என்ன தவறிழைத்தேன், மொய் குழல் மங்கை முலைப்பூசல் கேட்ட நாள் - செறிந்த கூந் தலையுடைய நங்கையின் முலையாற் செய்த பூசலைக் கேட்ட, நாளில், அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ - தோழீ தாய் உயிர் நீத்ததனைக் கேட்டாயோ, அம்மாமி தன் வீவுங் கேட்டாயோ தோழி - அம்மாமியின் இறப்பினையும் கேட்ட னையோ;

       
தீக்கனாக் கேட்டதனைக் 1 கனாத்திற முரைத்த காதையிற் காண்க. மங்கை, முன்னிலை. முலைப்பூசல் - மதுரையை எரித்தமை. அவ்வை - கண்ணகியின் தாய். அம்மாமி - மாமன் மனைவி; கோவலன்றாய்.



1 சிலப். 9 : 45--54.