6. வாழ்த்துக் காதை



6.

காவற்பெண் டரற்று

கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக்
காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச்
சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து
மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ அன்னை
மாநாய்கன் றன்றுறவுங் கேட்டாயோ அன்னை;



6
உரை
6

"கோவலன்றன்னை . . . கேட்டாயோ வன்னை"

        கோவலன் றன்னைக் குறுமகன் கோள் இழைப்ப - கோவலனைக் கீழோனாய் பொற்கொல்லன் தவற்றினைச் செய்ய அதனானே, காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டு ஏங்கி-பாண்டியன் தனது உயிர் விட்டமையைக் கேள்வியுற்று ஏக்கங்கொண்டு, சாவதுதான் வாழ்வு என்று- இவ் வாழ்க்கை கெடுவதாக வென்று கூறி, தானம் பலசெய்து மாசாத்துவான் துறவும்கேட் டாயோ அன்னை - பல தானங்களைச் செய்து மாசாத்துவான் துறவு பூண்டதனையும் அன்னாய் கேட்டனையோ, மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ அன்னை - மாநாய்கன் துறவினையும் அன்னாய் கேட்டனையோ;

கோள் - தவறு, கொலை, வாழ்வு சாவதுதான் என்க. 1 "அன்னை யென்னை யென்றலு முளவே" என்பதனாற் செவிலி கண்ணகியை அன்னை யென்றாள், இனி, தெய்வமாகி நிற்குமுறை நோக்கி இங்ஙனங் கூறினாளெனினும் அமையும்.



1 தொல். பொருள், 246.