6. வாழ்த்துக் காதை



7.

அடித்தோழி யரற்று

காதலன் றன்வீவுங் காதலி நீ பட்டதூஉம்
ஏதிலார் தாங்கூறும் ஏச்சுரையுங் கேட்டேங்கிப்
போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா னம்புரிந்த
மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழீ
மணிமே கலைதுறவுங் கேட்டாயோ தோழீ;



7
உரை
7

"காதலன்றன் . . . கேட்டாயோ தோழீ"

        காதலன் தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையுங் கேட்டு ஏங்கி - காதலனாய கோவலனது இறப்பி னையும் காதலியாகிய நீ எய்திய துன்பத்தினையும் அயலார்கூறும் பழிப்புரையினையுங் கேட்டு ஏக்கமுற்று, போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த மாதவி தன் துறவும் கேட்டாயோ தோழீ - போதி மரத்தின் நிழலிடத்துள்ள முனிவர்முன்னர் புண்ணியத்தையும் தரும தானத்தையும் செய்த மாதவியின் துறவையும் தோழீ கேட்டனையோ, மணிமேகலை துறவும் கேட் டனையோ தோழீ - அவள் மகள் மணிமேகலையின் துறவினையும் தோழீ கேட்டனையோ;

       
ஏச்சுரை - கோவலனிறந்ததற்கும் கண்ணகி துயருழந்தமைக் கும் இவளே காரணமாவாள் என்னுமுரை. மாதவி துறவு பூண் டமை, 1 "கோவல னிறந்தபின் கொடுந்துய ரெய்தி, மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும்" என்பதனாலறியப்படும். மாதவர் - அறவண வடிகள்..



1 மணி. 18 : 7-8.