6. வாழ்த்துக் காதை



10.

செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவு ணல்லணி காட்டியது

தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன் கோயில்
நல்விருந் தாயினான் நானவன் றன்மகள்
வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்
என்னோடுந் தோழிமீ ரெல்லீரும் வம்மெல்லாம்;



10
உரை
10

"தென்னவன் . . . வம்மெல்லாம்"

        தென்னவன் தீது இலன் தேவர்கோன் தன் கோயில் நல்விருந்து ஆயினான் - பாண்டியன் குற்றமுடையனல்லன் ஆகலான் அவன் இந்திரன் கோயிற்கண்ணே நல்ல விருந்தினன் ஆயினான், நான் அவன்றன் மகள் - நான் அப் பாண்டியன் புதல்வி யாவேன், வென்வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் - வென்றி வேலினை யுடையோனாய முருகனது மலையின்கண் விளையாடலை யான் ஒழியேன், என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம் - தோழிமீர் நீவிர் யாவிரும் என்னுடன் வாரீர்;

1 "எம்முறு துயரஞ் செய்தோ ரியாவதுந், தம்முறு துயரமிற் றாகுக வென்றே, விழுவோ ளிட்ட வழுவில் சாபம்" பட்டமையான் தென்னவன் றீதிலன் என்றாள். கோயில் - இந்திரன் இருக்கை. மக்கள் யாக்கையிற் கொண்ட வெகுளி யடங்கிக் கடவுள் யாக்கை பெறுதற்குக் காரணமாயினான் என்பது கொண்டு. நான் அவன் மகள் என்றாள். வம் - வம்மின். எல்லாம் - எல்லீரும்; அடுக்காகக் கொள்க; பின் வருவனவும் இன்ன.


1 சிலப். 23 : 167-9.