|
5
|
வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுட் கோலம் கட்புலம் புக்கபின்
தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி
வாயெடுத் தரற்றிய மணிமே கலையார்
யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக்
|
|
வடதிசை
வணக்கிய வானவர் பெருந்தகை - வடதிசையில் உள்ளாரைப் பணியச் செய்த சேரர் பெருமானாகிய
செங்குட்டுவன், கடவுட் கோலம் கட்புலம் புக்கபின் - கற்புக் கடவுள் வடிவு தன் கண்ணறிவிற்கு
வெளிப்பட்ட பின்னர், தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி - தேவந்தியை நன்கு நோக்கி,
வாய்எடுத்து அரற்றிய மணிமேகலை யார் யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என - நீ வாய்விட்டு
அழுங்கியுரைத்த மணிமேகலை என்பாள் யார் அவள் துறவுகோடற்குரிய காரணம் யாது இப்போழ்து
அதனை உரைப்பாயாகவென்று கேட்க ;
வடதிசை, ஆகுபெயர், கடவுட் கோலங்
கட்புலம்புக்கமை, 1"என்னே
யிஃது . . . மீவிசும்பிற் றோன்றுமால்" என்பதனாலுணர்க. முன்னர், கங்கையாற்றுத் தென்கரைக்கண்
தங்கியிருந்த செங்குட்டுவனிடத்து மாடலன், தான் ஆங்கே போந்தமைக்குக் காரணம் கூறப்
புக்கவன் காவிரிப்பூம்பட்டினத்துக் கோவலன் றந்தை முதலியோரைப் பற்றிக் கூறியக்கால்,
மணிமேகலையைக் குறித்து, "மாதவி மடந்தை, நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன், மணிமே
கலையை வான்றுய ருறுக்குங் கணிகையர் கோலங் காணா தொழிகென" என்றவளவே கூறி முடித்தானாகலான்,
ஈண்டுக் குட்டுவன், "வாயெடுத் தரற்றிய மணிமேகலை யார்" என்றான். வாழ்த்துக் காதையில்
"மணிமேகலை துறவுங் கேட்டாயோ" என்றமையான், 'யாதவள் துறத்தற்கேது' வென்றான். வாழ்த்துக்
காதையில் "மணிமேகலை துறவுங் கேட்டாயோ" என்பது தேவந்தியரற்று என்னும் பகுதியிற் காணப்படாது
அடித்தோழி யரற்று என்னும் பகுதியிற் காணப்படுதலின், மணிமேகலையைக் குறித்துத் தேவந்தியரற்றியது
பிறிதொரு காலாதல் வேண்டும்.
|
1.
சிலப். 29: "என்னே"
|
|