|
|
கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி
நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி
அணிமே கலையா ராயத் தோங்கிய
மணிமே கலைதன் வான்றுற வுரைக்கும்
|
|
கோமகன்
கொற்றம் குறைவு இன்று ஓங்கி நாடு பெருவளம் சுரக்கென்று ஏத்தி - வேந்தனது வெற்றி குறைவில்லாது
உயர்தலானே நாடு மிக்கசெல்வம் பெருகுவதாகவென வாழ்த்தி, அணிமேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலைதன் வான்துறவு உரைக்கும் - அழகிய மேகலையணிந்த மங்கையர் கூட்டத்தே அவரினும்
உயர்ந்த மணிமேகலையின் சிறந்த துறவினைக் கூறுவாள் ;
இன்றி என்பது இன்று எனத் திரிந்தது,
ஓங்கி என்பதனைக் காரணப்பொருட் டாக்காது, ஓங்கிச் சுரக்கவெனப் பிறவினை கொண்டு
முடிந்ததாகக் கூறலும் அமையும். நாடு வளஞ்சுரக்க வென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல்
ஏற்றப்பட்டது. |
|