|
100
|
ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின்
புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின்
இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்
ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக்
காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய்
யான்பெறு மகளே என்றுணைத் தோழீ
வான்றுயர் நீக்கும் மாதே வாராய்
|
|
ஒளித்த
பிறப்பு வந்து உற்றதை ஆதலின் - முந்தைப் பிறவியின் உணர்ச்சி வந்து தோன்றியதாகலான்,
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் இகழ்ந்து அதற்கு இரங்கும் என்னையும் நோக்காய்
- பிரிவுக் காலத்தும் நீ புகழ்ந்துரைத்த நின் கணவனது பெரியோர் வெறுக்கும் ஒழுக்கத்தினை
எள்ளி அவ்வொழுக்கங் காரணமாக வருந்தும் என்னையும் கருதாயாய், ஏதில் நல்நாட்டு யாரும்
இல் ஒரு தனிக் காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய் - வேற்று நாட்டிடை எவருந் துணையில்லாத
ஒப்பற்ற தனிமையால் கணவனோடே மிக்க துன்பமுற்றனை, யான்பெறு மகளே - யான் வருந்தியீன்ற
மகளே, என் துணைத் தோழீ - எனக்குத் துனையாகவிருந்தமையால் தோழி அனையாய், வான்துயர்
நீக்கு மாதே வாராய்-எமது மிக்க துயரத்தைப் போக்கிய நங்காய் வாராயோ ;
உற்றதை, வினைத் திரிசொல், ஒழுக்கின், இரண்டனுருபு தொக்கது. போற்றா வொழுக்கினால்
நின்னை இகழ்ந்ததற்கு என்றுரைத்தலுமாம். ஒரு தனி - தன்னந் தனியே. இது கண்ணகி தாயின்
கூற்று. |
|