7. வரந்தரு காதை

120





125





130

மறையோன் உற்ற வான்துயர் நீங்க
உறைகவுள் வேழக் கையகம் புக்கு
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி தன்மேற் காதல ராதலின்
மேனிலை யுலகத் தவருடன் போகும்

தாவா நல்லறஞ் செய்தில ரதனால்
அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்
வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்
பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்
அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டி

மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின்
உடன்வயிற் றோராய் ஒருங்குடன் றோன்றினர்



120
உரை
131

       மறையோன் உற்ற வான் துயர் நீங்க - தன்னிடத்துத் தானங்கொள்ள வந்த பார்ப்பனன் அடைந்த கொடிய துன்பம் ஒழிய, உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலிதன்மேல் காதலராதலின் - மதஞ்சொரியுங் கவுளினையுடைய யானையின் கையகத்தே நுழைந்து விண்ணோரது வடிவம் பெற்றோனாகிய கோவலன் கொண்ட கண்ணகியின்மீது அன்புடையா ராகலானும், மேல் நிலை உலகத்து அவருடன் போகும் தாவா நல் அறம் செய்திலர் அதனால் - துறக்கவுலகத்து அவருடன் சென்றடையும் கெடுதலற்ற நல்ல அறத்தினைச் செய்திலராதலானும், அம்செஞ்சாயல் அஞ்சாது அணுகும் வஞ்சிமூதூர் மருங்கில் - அழகிய செவ்விய சாயலுடையாள் சிறிதும் அஞ்சாதடைந்த பழைய ஊராகிய வஞ்சி நகரத்திடத்தே, பொன்கொடி தன்மேல் பொருந்திய காதலின் - கண்ணகியிடத்து அமைந்த அன்பாலே, அற்புஉளம் சிறந்து ஆங்கு அரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மன மகிழ் சிறப்பின் உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் - உள்ளத்தின் மிக்க அன்போடே அரட்டன் செட்டியின் மனைவி உள்ளம் மகிழ்தற்குரிய சிறப்போடே ஒருவயிற்றிடத்து ஒரு சேரத் தோன்றினர் ;

       மறையோன் துயர் நீங்க வேழக் கையகம் புக்கதனை, 1"மறையோன்றன்னை ... கருணை மறவ" என முன்னுரைத்தமையானுணர்க. உறைத்தல் - சிந்துதல். காதலர் - கண்ணகிதாயும் கோவலன் தாயும். மேனிலை உலகம் - துறக்கவுலகம். வேழக் கையகம் புக்கு அவ்வறத்தினாலே பின் வானோர் வடிவம் பெற்றவன் என்க. பெற்ற - மணந்துகொண்ட. பெற்றவன்மேலும் பெற்ற காதலி மேலும் காதலராதலின் என்றுமாம். காதலராதலின் அவருடன் செல்லுந்தன்மைமயினர் அறஞ் செய்திலாமையால் மேனிலை யுலகத்துச் செல்லகில்லாராய்க் கண்ணகிமீதுள்ள அன்பினால் அவள் அணுகிய வஞ்சி மூதூரிற் பிறந்தனரென்க. அஞ்செஞ்சாயல் - கண்ணகி. மடமொழி நல்லாள் - அரட்டன் செட்டி மனைவி. இரட்டையராகித் தோன்றலான் ஒருங்குடன் தோன்றினர் என்றான்.


1. சிலப். 15 ; 45-53.