7. வரந்தரு காதை






140





145

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும்

புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை
ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்
செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும்
கையகத் தனபோற் கண்டனை யன்றே

ஊழிதோ றூழி யுலகங் காத்து
நீடுவா ழியரோ நெடுந்தகை யென்ற
மாடல மறையோன் றன்னொடு மகிழ்ந்து



136
உரை
147

       நல்திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் - நல்ல அறத்தின் வகைகளை விரும்பிச் செய்தோர் பொன்னுலகம் அடைதலும், அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் - ஒருவர்பால் அன்புமிக்க உள்ளமுடையோர் இந்நிலத்துத் தாம் அன்பு வைத்த இடத்தே பிறத்தலும், அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் - ஒருவன் செய்த அறத்தின் நற்பயன் அவற்கு உண்டாதலும் பாவத்தின் தீப்பயன் உண்டாதலும், பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் - இவ்வுலகிடைத் தோன்றியோர் மறைதலும் மறைந்தோர் தோன்றுதலும், புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை - புதியனவல்ல படைப்புக் காலந் தொட்டே நிகழும் வழக்காகும், ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் - நீ இடபத்தை ஊர்தியாகவுடைய இறைவனது திருவருளானே பிறந்து இப் பெரிய உலகினை விளக்கமுறச் செய்த வேந்தனாகலான், செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும் கையகத்தனபோல் கண்டனை அன்றே - செய்யப்பட்ட தவத்தின் பயனாயுள்ளவற்றையும் உயர்ந்தோரது படிவத்தையும் அங்கையில் உள்ளனபோலத் தெளிவுற அறிந்தாய், ஊழிதோறூழி உலகம் காத்து நீடு வாழியரோ நெடுந்தகை என்ற மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து - பல்லூழி இந்நிலத்தினைப் புரந்து நெடிதினிது வாழ்வாயாக நெடுந்தகாய் என்றுரைத்த மாடலனோடு மகிழ்வுற்று ;

       பொற்படி - பொன்னுலகம். அன்பு, அற்பாயிற்று. அறப்பயன் விளைதல் முதலியவற்றை, 1"பிறந்தோ ரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும், அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும்" என்பதனானு மறிக. எய்தல் முதலிய தொழில்களைப் புதுவதன்று என்பதனோடு தனித்தனி முடிக்க. இவன் சிவபிரானருளாற் றோன்றியவனென்பது 2"செஞ்சடை வானவ னருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்" என முன்னர் முனிவர் கூறியதனானும் பெற்றாம். சிறந்தோர் - தேவர். அன்று ஏ, அசைகள்.


1. மணி, 21 : 16-20. 2. சிலப், 26 : 98--9.